மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய மக்கள் தயங்குவதற்கு முதல் காரணம் அவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால் தான். ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றின் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் சிறு சேமிப்பு திட்டமாக மாறியது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் எனில் அதிகப் பணமும், அறிவும் தேவை ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் 100 ரூபாய் இருந்தாலே முதலீடு செய்ய முடியும். அவற்றைப் பற்றி சில வாரங்கள் படித்தாலே புரியும் அளவிற்கு அதன் செயல்பாடுகள் இருக்கும். அப்படியிருக்க மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக மியூச்சுவல் ஃபண்டில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சந்தையில் சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் எது என்ற தேடல் பெரிதாகி உள்ளது. அது எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல், சீசனுக்கு சீசன் மாறும். அவற்றை தொடர்ச்சியாக பின்தொடர்வதன் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். சிலர் கூகுளில் தேடுவதும் உண்டு, ஆனால் பொதுவாக கூகுளில் தேடினால் ஏதோ ஒரு வெப்சைட்டுக்கு கூட்டி செல்லும். அதில் பொதுவாக ஒரு லிஸ்ட் கொடுக்க பட்டிருக்கும். ஆனால் அவை எந்த அளவுக்கு தாக்கமுள்ளதாக இருக்கும் என்பது தெரியாது. சிலர் முன்னணியில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்து விடுவார்கள். ஆனால் அதுவும் சரி அல்ல, அதனால்தான் இந்த தொகுப்பு.
இதில் இந்த வருடம் முதலீடு செய்ய தகுந்த மியூச்சுவல் ஃபண்ட் குறித்து பார்க்கலாம். அக்ரெஸிவ், ஹைப்ரிட், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் மற்றும் ஃப்ளெக்ஸி கேப் என தனித்தனியாக திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. கடைசிவரை படித்து உங்களுக்கு ஏற்ற திட்டங்களை வகுத்து அதில் முதலீடு செய்து பயன்பெறவும்.
அந்த லிஸ்ட்:
- ஆக்சிஸ் புளூசிப் ஃபண்ட்
- மிரே அசெட் லார்ஜ் கேப் ஃபண்ட்
- பராக் பரிக் நீண்ட கால ஈக்விட்டி ஃபண்ட்
- யுடிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்
- ஆக்சிஸ் மிட்கேப் ஃபண்ட்
- கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட்
- ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட்
- எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட்
- எஸ்பிஐ ஈக்விட்டி ஹைப்ரிட் ஃபண்ட்
- மிரே அசெட் ஹைப்ரிட் ஈக்விட்டி ஃபண்ட்
இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. முதலில், ஒவ்வொரு வகையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும், அது உங்கள் முதலீட்டு நோக்கத்திற்கு பொருந்துமா என்பதைக் கண்டறிய வேண்டும்.
அக்ரெசிவ் ஹைபிரிட் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்க்கு புதிதாக வருபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்தத் திட்டங்கள் பங்கு (65-80%) ஆகவும், கடன் (20-35) ஆகவும் சேர்த்து முதலீடு செய்கின்றன. இது இரண்டும் சேர்ந்து இயங்கும்போது அவை ஒப்பீட்டளவில் குறைந்த ரிஸ்க் உடையதாக கருதப்படுகின்றன. அக்ரெசிவ் ஹைப்ரிட் திட்டங்கள், அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் நீண்ட கால செல்வத்தை உருவாக்க விரும்பும் பழமைவாத ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கு சிறந்த முதலீட்டு திட்டமாகும்.
சில பங்கு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்யும் போது கூட ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்புவார்கள். இந்த நபர்களுக்கானதுதான் லார்ஜ் கேப் திட்டங்கள். இந்தத் திட்டங்கள் மூலம் சிறந்த 100 பங்குகளில் முதலீடு செய்யலாம், மேலும் அவை மற்ற பியூர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக இருக்கும். நிலைத்தன்மையுடன், சுமாரான வருமானத்தை எதிர்பார்ப்பவர் என்றால், நீங்கள் லார்ஜ் கேப் திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
தொடர்ச்சியாக பங்குகளில் முதலீடு செய்யும் ஒருவர் எதையும் யோசிக்காமல் ஃப்ளெக்சி கேப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். தொடர்ச்சியாக இதனை பின்தொடர்ந்து வரும் ஒரு முதலீட்டாளர் எப்படியும் இதில் இருந்து லாபம் ஈட்டிவிடுவார். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் தேவை என்ன என்பதை அறிந்து, உங்களுக்கு ஏற்ற திட்டம் எது என்று கண்டுபிடித்து முதலீடு செய்வதே அறிவார்ந்த செயல்.