இந்தியாவின் வருடாந்திர டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை அண்மையில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த முறையும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இது மட்டுமல்ல சற்றும் எதிர்பாராத விதமாக டாப் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து எண்ணிக்கை இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் 755 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களை வாங்கியது, பங்குச் சந்தையில் சில சறுக்கல்களைத் தவிர தொடர்ந்து வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தது என பல்வேறு காரணங்கள் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக அந்நிய நிறுவனமான ஃபார்ட்யூன், மற்றும் இந்தியாவின் மிகப்பழமையான நிறுவனமான ஜஸ்ட் டயல் ஆகியவற்றை முகேஷ் அம்பானி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலர். அம்பானியை அடுத்து அதானியும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சிவ் நாடாரும் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
அடுத்ததாக அண்மையில் பங்கு ஒன்றுக்கான விலை 1022 ரூபாய் வீதம் 2.12 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க ஜஸ்ட் டயல் நிறுவனம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தில் 25.35 சதவிகிதப் பங்குகளை தற்போது ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது. ஆக மொத்தம் இதுவரை 40. 98 சதவிகிதப் பங்குகளை ஜஸ்ட் டயல் நிறுவனரான வி.எஸ்.எஸ். மணியிடமிருந்து இதுவரை ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமம் வாங்கி இருந்தாலும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வி.எஸ்.எஸ். மணியே தொடருவார் என ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வசம் 3 கோடி பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் பிரத்யேகமாக 12.9 கோடி வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளம், செயலி மற்றும் போன் மூலமாக வருகிறார்கள். வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,690 கோடியாக இருக்கிறது. ஆனால் இது இந்த நிறுவனத்தின் உச்சபட்ச சந்தைமதிப்பு அல்ல. 2014-ம் ஆண்டு சமயத்தில் சுமார் ரூ.12,000 கோடிக்கும் மேலே நிறுவனத்தின் சந்தை மதிப்பு இருந்தது. ஆனால் அதன்பிறகு படிப்படையாக குறையத் தொடங்கியது.தற்போது 6690 கோடி ரூபாய் நிறுவனமாக இருந்தாலும் 1996-ம் ஆண்டு சுமார் 50000 ரூபாயில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது.