இந்தியாவின் இரண்டாம் பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமான வீடான மும்பை ஆல்ட்டா மவுன்ட் சாலையில் அமைந்திருக்கும் அன்டிலியாவில் வசிக்கிறார்.  27 மாடிகளை கொண்ட இந்த வீட்டில் சகல வசதிகளும் இருக்கின்றன.


முகேஷ் அம்பானியின் அரண்மனை வடிவில் உள்ள அன்டிலியா வீட்டின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா இல்லத்தில் 27 தளங்கள் உள்ளன. அதில் மூன்று ஹெலிபேடுகள், ஆறு கார் பார்க்கிங், ஒரு கோயில், ஒரு திரையரங்கம். , ஒரு ஸ்பா, ஒரு ஐஸ்கிரீம் பார்லர் ஆகியவை உள்ளன. 8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் வந்தால் கூட தாங்கும் அளவுக்கு இந்த மாளிகை திடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது லிஃப்ட்கள் உள்ள இந்த வீட்டில் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தும் லிப்ட் போக, விருந்தினர்கள், பணியாளர்கள் செல்வதற்கு என தனித்தனி லிஃப்ட் உள்ளன. 168 கார்களை ஒரே நேரத்தில் பார்க்கிங் செய்யும் அளவுக்கு பரந்து விரிந்த பார்க்கிங் இந்த வீட்டில் உள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீதா அம்பானி தங்கள் இரண்டு மகன்களான ஆனந்த் மற்றும் ஆகாஷ் ஆகியோர் குடும்பத்துடன் இந்த வீட்டில் தங்கி உள்ளனர்.


இதற்கிடையில், முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் கட்டடத்தில் 49 பிரமாண்ட பெட்ரூம்களுடன் பல வசதிகள் உள்ளன. இந்த வீட்டிற்கு தற்போது முகேஷ் அம்பானி குடும்பத்துடன் இடம்பெயர இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.


பாம் ஜூமைரா மேன்சன்..
இவையெல்லாம் பத்தாது என்று நினைத்தாரோ என்னவோ முகேஷ் அம்பானி துபாயில் ஒரு பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த வாரம் பாம் ஜூமைரா மேன்சன் என்ற பிரமாண்ட வில்லா ஒன்றை 163 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வாங்கியுள்ளார். குவைத் பிசினஸ் முதலையான முகமது அல்ஷயாவிடமிருந்து இந்த வீட்டை அவர் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அல்ஷயா குழுமம் ஸ்டார்பக்ஸ், H&M, விக்டோரியா சீக்ரட் போன்ற பிரபல பிராண்டுகளின் உள்ளூர் ஃப்ரான்சைஸி எடுத்துள்ளது. அவர்கள் தொழிலின் சந்தை மதிப்பு 84 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முகேஷ் அம்பானி இந்த வீட்டை வாங்கியுள்ளார். கடைசியாக அம்பானி துபாயில் 80 மில்லியன் டாலர் செலவில் ஒரு சொத்தை வாங்கியிருந்தார்.


இந்நிலையில் இப்போது 163 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் பாம் ஜூமைரா மேன்சனை அவர் வாங்கியுள்ளார். துபாய் அரசின் நிலத் துறை  163 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து பதிவானதை உறுதி செய்திருந்தாலும் கூட அதை யார் வாங்கினார்கள் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த மாதம் மட்டும் துபாய் நில துறை வெளியிட்ட தரவுகள் படி சுமார் 163 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் Palm Jumeirah பகுதியில் மட்டுமே செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. இது தான் Palm Jumeirah வர்த்தக வரலாற்றில் வரலாற்று உச்ச அளவாகும்.