பணியில் உள்ள பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளும் #WorkingStree என்கிற அமைப்பு அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.இது இந்தியாவின் முழுவதும் உள்ள பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் வசிக்கும் 21–65 வயதுக்குட்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்களிடம் நடத்தப்பட்டது.
அனைத்து பணிபுரியும் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடாந்திர கணக்கெடுப்பின்படி பணிபுரியும் பெண்களில் 2/3 பேர் நிதிச் சுதந்திரம் என்றால் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பது என கருத்து வெளிப்படுத்தியுள்ளனர்.'நிதி சுதந்திரம்' என்பது, நிதித் தேவைகளுக்காக யாரையும் சார்ந்திருக்காமல் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்யும் சுதந்திரம் என வரையறுத்துள்ளனர்.
மேலும் ஏறக்குறைய 67 சதவிகிதம் பெண்கள் தங்களுடைய நிதி தொடர்பான முடிவுகளை எடுக்க குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களைச் சார்ந்து உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 2023-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது, இது பணிபுரியும் பெண்களின் நிதிச் சுதந்திரம் மற்றும் அவர்களது தொழில்முனைவு ஆர்வம் தொடர்பாக அறிந்துகொள்ள நடத்தப்பட்டது.
இதில் பதிலளித்தவர்களில் 22 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்களுக்கான நிதி முடிவுகளை எடுப்பதில் தாங்கள் யாராலும் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதுதவிர கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான பெண்கள் சொந்தத் தொழில் தொடங்குவதில் ஆர்வமாக உள்ளனர், அவர்கள் நான்கில் ஒருவர் தொழில்முனைவோராக உருவாகுதலுக்கான விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் நான்கில் ஒரு பங்கு நபர் ஒரு குறிப்பிட்ட தொழிலில் தங்களை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பதிலளித்தவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வருமானத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வீட்டுத் தேவையில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த வீட்டுச் செலவில் 40 சதவிகிதத்துக்கும் மேல் இவர்களது நிதி செலவழிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பெண்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள், அதே சமயம் 23 சதவ்கிதம் பேர் ரூ. 5-10 லட்சம் வரை ஈட்டுகின்றனர். அவர்களது வீட்டுச் செலவுகளுக்கு பெருமளவிலானோர் கணிசமான பங்களிப்பை வழங்கினாலும், கிட்டத்தட்ட 67 சதவிகிதம் பேர் கணவன், தந்தை அல்லது சகோதரன் ஆகியோரைத் தங்களது நிதி தொடர்பான முடிவுகளுக்காகச் சார்ந்து இருக்கின்றனர். இதுதவிர பணிபுரியும் பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்களுக்குப் பிடித்தமானதில் செலவிட மட்டும் தாங்களே முடிவு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதவிர முதலீடுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் 3ல் 1 பங்கு பெண்கள் தங்களுக்கு முதலீடு குழப்பமானதாக இருப்பதாகவும் 4ல் 1 பங்கு பெண்கள் மட்டுமே முதலீட்டில் ஈடுபடுவதாகவும் 3ல் 1 பங்கு பெண்கள் தங்கள் வீட்டில் ஆண்கள் தான் முதலீட்டு முடிவுகளை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.