2026ம் ஆண்டு வரப்போகிறது என்ற ஆனந்தம் நம் மனதுக்குள் இருக்கும். 2025ம் ஆண்டில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகள், சோக சம்பவங்கள் போன்று எதுவும் இல்லாமல் புத்தாண்டு நம் வாழ்க்கை இனிதாக இருக்க வேண்டுமென்பதே பலரின் ஆசையாக இருக்கும். இந்த புத்தாண்டு நாளில் நம்மில் பலரும் பல விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் என்பது தொடர்பாக உறுதிமொழி எடுப்போம். உடல் ஆரோக்கியம் தொடங்கி எதிர்கால வாழ்க்கைக்கான சேமிப்பு வரை அதனை பிரிக்கலாம். ஆனால் நாம் செய்யும் சில தவறுகள் பொருளாதார விஷயத்தில் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கி சேமிப்பு இல்லாமல் அதிகப்படியான செலவுக்கு இட்டுச் செல்லும். அதனை எவ்வாறு தவிர்க்கலாம் என பார்ப்போம்.
இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது குறைந்து விட்டது. ஆய்வின்படி ரூ.100க்கு ரூ.5 மட்டுமே சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இது கடந்த காலங்களில் மிகவும் குறைவான சேமிப்பு தொகையாகும். வாழ்க்கை செலவுகள், விலைவாசி உயர்வு, கடன் எளிதாக கிடைப்பது என பல காரணங்கள் இதற்காக அடுக்கப்படுகிறது. இது சேமிப்புக்கு செல்லாமல் நிதி நெருக்கடி வழிவகுக்கும் என்பதால் கண்டிப்பாக சேமிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த விஷயங்கள் மட்டும் மிக முக்கியம்
முதலாவது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட சம்பளம் பெறுகிறீர்கள் என்றால் அதில் சேமிப்பு என்பது செலவு கணக்கில் தான் வரும் என்பதை உணருங்கள். குறைந்தது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை சேமியுங்கள். பின் இருப்பவற்றை செலவிடுங்கள். ஒருவேளை மாத கடைசியில் பணமில்லை என்றால் இந்த சேமிப்பு கைக்கொடுக்கும். செலவு செய்தது போக மீதம் உள்ளதை சேமிக்கலாம் என்றால் எதுவும் மிஞ்சாது.
இரண்டாவதாக, சம்பளம் பெறும் நாளில் உங்கள் சேமிப்பு, நகைச்சீட்டு, முதலீட்டு கணக்குகளுக்கான பணத்தை செலுத்துங்கள். இதன்மூலம் கடைசி நேரத்தில் செலுத்தலாம் என நினைப்பவர்கள் சிக்கலின்றி செயல்படலாம்.
நம்மில் பலரும் பங்குச்சந்தை முதலீடு பற்றி மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை பெற்றுள்ளோம். மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பாளர்களுக்கு உதவும். ஆனால் பங்குச்சந்தை முதலீட்டை நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சந்தையில் ஏற்படும் மாற்றம், சமூக வலைத்தளங்களில் கூறப்படும் தகவல்கள், பணம் இழக்கும் அபாயம் போன்றவை காரணமாக முதலீடு செய்பவர்கள் அவசரமான முடிவுகளை எடுக்கிறார்கள். அப்படி செய்யாமல் 2026ஐ சிறப்பாக கொண்டு செல்லுங்கள்.
நீங்கள் வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களில் நோட்டீஸ் பீரியட் காலக்கட்டத்தில் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். நம்மிடமும் சேமிப்பு இல்லாமல் இருந்தால் இந்த காலகட்டத்தில் நாம் சிரமப்பட நேரிடும். எனவே முடிந்தவரை சேமியுங்கள். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யாதீர்கள். வரவுக்கு ஏற்ற செலவு செய்ய நீங்களும் சரி, குடும்பத்தினருக்கும் சரி கற்றுக்கொடுங்கள்.
செலவுகள் வந்துக் கொண்டே இருக்கும். பணம் வரும்போது கொடுத்து விடலாம் என நினைத்து கடன் வாங்காதீர்கள். அந்த பணம் வரும் காலக்கட்டத்தில் செலவுகள் வரும்போது திண்டாடும் வாய்ப்பும் உள்ளது. மேலும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை மருத்துவ செலவுக்கு ஒதுக்குங்கள். தேவை இல்லாத பட்சத்தில் மாத கடைசியில் அதனை செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.