தேசியப் பங்குச் சந்தையில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கு நேற்று சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி “இதுபோன்ற ஊழல்கள் நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 2013 முதல் 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது பல பல ஊழல்கள் தேசிய பங்குச்சந்தையில் நடந்துள்ளன. தேசிய பங்குச் சந்தையின் முக்கியமான தகவல்களை இமயமலை யோகி என்பவரிடம் பகிர்ந்த ஊழலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்தபோது சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியது. தனிப்பட்ட முறையில் அவர் சில நபர்களை பணி நியமனம் செய்தது முதல் தேசிய பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்ட தகவல் பகிர்வு வரை அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீள்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ஆனந்த சுரமணியம் என்பவரை மார்ச் 23 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், “இந்த வழக்கு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்? இதன் அளவு என்ன? ரூ.1,000 கோடியா? எனக்குத் தெரியாது. நிச்சயம் பெரியதாக இருக்கும். இது ஒரு சிறிய மோசடி அல்ல. நாட்டின் நற்பெயருக்கு ஆபத்து விளைவித்திருக்கிறது. மக்கள் தங்கள் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். NSE நியாயமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஊழலும் மோசடிகளும் நடக்கிறது என்று தெரிந்தால், யார் நம் நாட்டில் பணத்தை முதலீடு செய்வார்கள்? இந்த விசாரணையை நீங்கள் மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்கிறீர்கள். இப்படியே இது குறித்து நீங்கள் நான்கு ஆண்டுகள் விசாரணை நடத்திக் கொண்டே இருக்கக் கூடாது. விசாரணையை விரைந்து முடித்திட வேண்டும். இப்படி நடந்தால் இந்தியாவில் யார் முதலீடு செய்வார்கள்?” என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஐ விசாரணை மெதுவாக நடப்பதை விமர்சித்த நீதிமன்றம், “இந்த விசாரணை இன்னும் பல ஆண்டுகளாக தொடருமா? இதனால் நமது நம்பகத்தன்மை அனைத்தும் காணாமல் போய்விடும். முதலீட்டாளர்கள் அனைவரும் சீனாவுக்குச் சென்றுவிடுவார்கள் என்று சொன்னார்.
இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ஓபிஜி செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும் விளம்பரதாரருமான சஞ்சய் குப்தா மற்றும் பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. குப்தா 2010 மற்றும் 2014 க்கு இடையில் தேசியப் பங்குச் சந்தையின் சர்வர் கட்டமைப்பை தவறாக பயன்படுத்தினார். தேசியப் பங்குச் சந்தையின் அதிகாரிகளுடன் சதியில் ஈடுபட்டார் மற்றும் செபி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார் என்றும் இந்த வழக்கில் பல்வேறு குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.