ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான லூலூ குழுமம் கடந்த டிசம்பர் 11 அன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் ஷாப்பிங் மால் ஒன்றைத் தொடங்க சுமார் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வர்த்தகத்தைப் பெருக்கும் தங்கள் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது லூலூ குழுமம். 


குஜராத் அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக லூலூ குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லூலூ குழுமத்திற்குச் சொந்தமாக ஏற்கெனவே இந்தியாவில் மூன்று மால்கள் இயங்கி வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் இரண்டு மால்கள் இந்தியாவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த முதலீடு குறித்து குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், லூலூ குழுமத்தின் தலைவர் யூசுப் அலி ஆகியோர் துபாயில் மேற்கொண்ட சந்திப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


`ஒளிரும் குஜராத் சர்வதேச உச்சி மாநாடு’ என்ற நிகழ்ச்சியின் விளம்பரப் பணிகளுக்காக குஜராத் முதல்வர் அதிகாரபூர்வமான பயணமாக துபாய் சென்று, குஜராத் மாநிலத்திற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்றுள்ளார். 



குஜராத் அரசு - லூலூ குழுமம் ஒப்பந்தம்


 


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகமதாபாத், காந்திநகர் ஆகிய நகரங்களுக்கு மத்தியில் லூலூ வர்த்தக மால் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடப் பணிகளில் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டு, 30 மாதங்களில் முழுவதுமாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


`குஜராத் அரசுத் தரப்பில் லூலூ குழுமத்தின் பணிகளுக்கு உதவி செய்யப்படுவதோடு, அதற்காக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் உதவிக்கு நியமிக்கப்படுவார்’ எனக் கூறப்பட்டுள்ளது. 


இது மட்டுமல்லாமல், குஜராத் மாநிலத்தின் பரோடா, சூரத் ஆகிய நகரங்களில் லூலூ குழுமம் சார்பில் உணவுப் பதப்படுத்துதல், தளவாட நிறுவனங்கள் ஆகியவற்றை ஏற்றுமதிக்காக உருவாக்கப்படவுள்ளது. 



யூசுப் அலி


 


குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், `குஜராத்தில் முதலீடு செய்ய விரும்பும் யூசுஃப் அலியின் வாக்கை நாங்கள் வரவேற்கிறோம். நிலம் முதலான அனைத்து உதவிகளையும் லூலூ குழுமத்திற்கு அளித்து அனைத்து உதவிகளையும் குஜராத் அரசு மேற்கொள்ளும்’ எனக் கூறியுள்ளார். 


இந்த முதலீடு குறித்து லூலூ குழுமத்தின் இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி, `குஜராத் மாநிலத்திற்கு என் மனதில் சிறப்பான இடம் உண்டு. இங்கு தான் நான் வர்த்தகத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டேன். என் அப்பாவின் குடும்பத் தொழில் அகமதாபாத்தில் இருந்து செயல்பட்டு வந்தது. குஜராத்தில் முதலீடு செய்வதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த மாநிலத்தில் நம் பணிகளை மேலும் பெருக்கலாம் என நம்பிக்கை கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். 


லூலூ குழுமம் சார்பில் மத்திய கிழக்கு நாடுகள், எகிப்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா முதலான நாடுகளில் சுமார் 220 ஹைபர் மார்கெட்கள், ஷாப்பிங் மால்கள் இயங்கி வருகின்றன. மேலும் உலகம் முழுமது சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு லூலூ குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.