இப்போதெல்லாம் கடைக்கு எதாவது பொருட்கள் வாங்கச் சென்றால் கையில் வாலட்டை வைத்திருக்கக் கூட தேவையில்லை. கையில் போன் இருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. தள்ளுவண்டி கடை முதல் பெரிய பெரிய வணிக வளாகங்கள் வரை பேடி எம், ஜி பே, போன் பே போன்ற பண பரிவர்த்தனை செயலிகளை ஏற்றுக்கொள்கின்றன. செல்போன் மூலமே பண பரிவர்த்தனையும் நடக்கிறது. இந்த போட்டி உலகில் பயனாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், புதிய பயனாளர்களை வர வழைக்கவும் அந்தந்த நிறுவனங்கள் நிறைய ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன. கேஷ்பேக் ஆஃபர், தள்ளுபடி, கூப்பன் என நிறைய ஆஃபர்கள். அந்த வகையில் பேடிஎம் மிகப்பெரிய கேஷ்பேக் ஆபரை அறிவித்துள்ளது. அதுவும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு. என்ன ஆஃபர்? எப்படி பெறுவது பார்க்கலாம்.
என்ன ஆஃபர்?
பேடிஎம் மூலம் உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் புக் செய்யலாம் என்ற வாய்ப்பை வைத்துள்ளது பேடிஎம். மாதத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 3 மாதங்களுக்கு மூன்று சிலிண்டர்கள் புக் செய்யும் வரை உங்களுக்கு இந்த கேஷ்பேக் உண்டு. ஒரு சிலிண்டருக்கு ரூ.900 வீதம் 3 சிலிண்டர்களுக்கு ரூ.2700 கேஷ்பேக் உண்டு என அறிவித்துள்ளது பேடிஎம்.
விதிமுறைகள் என்ன?
என்னோட செல்போனில் பேடிஎம் இருக்கிறது. ஜாலிதான் என்று துள்ளிக்குதித்துவிட வேண்டாம். இந்த சலுகை காலம் காலமாக பேடி.எம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அல்ல. புதிதாக இப்போது பேடிஎம்மில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.
எப்படி?
உங்களது பேடிஎம் பக்கத்திற்கு சென்று ‘Book a Cylinder’என்ற ஆப்ஷனை க்ளிக் செய்துகொள்ள வேண்டும். பின்னர் எந்த நிறுவனத்தின் சிலிண்டர், எல்பிஜி ஐடி, வாடிக்கையாளர் எண், செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பின்னர் பேடிஎம் மூலம் பணத்தை செலுத்தலாம். இந்த ஆஃபர் இந்தியன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
எல்பிஜி முன் பதிவை குறி வைத்து பேடிஎம் சில ஆஃபர்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. முன்னதாக கடந்த மாதம் Pay Now, Pay After என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி சிலிண்டர் புக் செய்யும் போது பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. Pay After திட்டத்தின் மூலம் சிலிண்டர் புக் செய்து ஒரு மாதத்துக்கு பின்பும் பணத்தை செலுத்தலாம் என்று அறிவித்தது. இந்நிலையில் தற்போது கேஷ்பேக் ஆபரை அறிவித்துள்ளது
இது குறித்து தெரிவித்துள்ள பேடிஎம் செய்தித் தொடர்பாளர், அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனையை செய்ய வேண்டுமென்பதை இலக்காக வைத்துள்ளோம். சிலிண்டர் முன் பதிவு இந்தியாவின் ஒவ்வொரு வீடுகளிலும் முக்கியமான ஒன்று என்றார்.