தங்க நகைகளைப் போல வெள்ளி நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களைக் காணலாம்.
ஆபரணங்கள் மீது பிரியம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ளது. தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என பல வகையான ஆபரணங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தங்கம் என்பது விலை மதிப்புமிக்க ஆபரணமாக பார்க்கப்படுகிறது. அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. இதைவிட மிக முக்கியம் கடினமான காலங்களில் தங்கத்தை நாம் தனியார் அல்லது அரசுடைமை வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற முடியும். ஆனால் பிற ஆபரணங்களை வைத்து பெற முடியாது.
இனி வெள்ளிக்கும் பணம்
இப்படியான நிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்துக்கும் மேலே சென்று விட்ட நிலையில் சவரன் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விலையேற்றம் நடுத்தர மக்களை கலங்கச் செய்துள்ளது. மிகச்சிறந்த முதலீடு தங்கம் என சொல்லப்பட்ட நிலையில் சிறுக சிறுக சேமித்தாலும் அதனை வாங்க முடியாத சூழல் இருப்பதாக புலம்பி தவிக்கின்றனர்.
இதனால் பலரின் கவனமும் வெள்ளி நகைகள் மீது திரும்பியுள்ளது. எனினும் கஷ்ட காலங்களில் இதனை அடமானம் வைக்க முடியாது என்றாலும், நமக்கென சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நகை இருக்கும் என பலரும் வாங்க முனைந்துள்ளனர். இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கி அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தங்கத்தைப் போல வெள்ளியை அடமானம் வைத்து கடன் வாங்கலாம் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் தனிநபர்கள் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்களை அடமானம் வைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு முறைகள் ரிசர்வ வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் விலை மதிப்பற்ற உலோகக்கடன் சந்தையில் சீரானப்போக்கு, வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதாகும். மேலும் இந்த புதிய விதிமுறைகள் 2026ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு விதிமுறைகளா?
இந்த வகையில் வணிக ரீதியிலான அரசு மற்றும் தனியார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனம், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், கிராமப்புற கூட்டுறவு வங்கி ஆகியவை வெள்ளிக்கு கடன் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைகள் அல்லது நாணயங்கள் வடிவில் இருக்கும் ஆபரணங்களுக்கு மட்டுமே கடன் வழங்க முடியும் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சம் 10 கிலோ வெள்ளி நகைகளுக்கு ஈடாக நாம் பணம் பெற முடியும். நாணயங்களாக இருந்தால் 500 கிராம் வரை பெற முடியும். ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகை இருந்தால் உங்களால் ரூ.85 ஆயிரம் வரை கடன் பெற முடியும் என சொல்லப்படுகிறது.
கடன் தொகையை நிர்ணயிக்க குறிப்பிட்ட நாளில் இருந்து கடைசி 30 நாட்களின் சராசரி விலை அல்லது முந்தைய நாளின் விலை ஆகியவற்றில் எவை குறைவாக இருக்கிறதோ அது கருத்தில் கொள்ளப்படும் என கூறப்படுகிறது. கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், வங்கி வெள்ளி நகைகளை ஏலம் விடலாம். முதலில் வாடிக்கையாளருக்கு அறிவிப்பு, பின்னர் பொது ஏல அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். இரண்டு முறை ஏலம் தோல்வியடைந்தால் இருப்பு விலை 85% வரை குறையும். கடனைத் திருப்பிச் செலுத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு வாடிக்கையாளர் நகைகளை பெறவில்லை என்றால் அவை உரிமை கோரப்படாத பிணையமாக அறிவித்து வாரிசுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.