உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் நடப்பாண்டு பட்டியலை, ஃபார்ட்யூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


ஃபார்ட்யூன் குளோபல் 500:


சர்வதேச அளவில் வருவாய் அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியலை, ஃபார்ட்யூன் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஃபார்ட்யூன் குளோபல் 500 என்ற தலைப்பிலான, 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த சில நிறுவனங்களும் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. 


வால்மார்ட் சாம்ராஜ்ஜியம்:


ஃபார்ட்யூன் குளோபல் 500 பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த சில்லறை விற்பன நிறுவனமான வால்மார்ட் தொடர்ந்து 10வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த 1995ம் ஆண்டு முதல் 18வது முறையாக இந்த பட்டியலில் வால்மார்ட் நிறுவனம் முதலிடம் பிடிக்கிறது. நடப்பாண்டில் பெரும் வளர்ச்சி கண்ட அமெரிக்க நிறுவனங்களில் வால்மார்ட்டும் ஒன்று. அந்த வகையில்  2022-23 நிதியாண்டில் மட்டும் அமெரிக்காவை சேர்ந்த 136 நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 


அரம்கோ சாதனை:


உக்ரைன் - ரஷ்யா போர், எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக சவுதி அரேபியாவை சேர்ந்த அரம்கோ நிறுவனம் பெரும் வருவாய் ஈட்டியுள்ளது. அதன்படி, 2022-23 நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 159 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்ட்யூன் குளோபல் 500 பட்டியலில் இடம்பெற்ற எந்தவொரு நிறுவனமும்,ஓராண்டில் இவ்வளவு தொகையை வருவாயாக ஈட்டியதில்லை. இதேபோன்று மற்ற எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில் 7வது இடத்திலும், ஷெல் நிறுவனம் 9வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.


ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம்:


இதனிடிடையே, ஃபார்ட்யூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் குழுமம் 88வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த பட்டியலில் பெற்ற, அதிகபட்ச முன்னேற்றம் இதுவே ஆகும். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 104வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் குழுமம் நடப்பாண்டில் 16 இடங்கள் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டில் இந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழுமம் 155வது இடத்தில் இருந்தது. இரண்டே ஆண்டுகளில் அந்த நிறுவனம் 67 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது.


இந்திய நிறுவனங்களின் பட்டியல்:


ரிலையன்ஸ் குழுமத்துடன் சேர்த்து இந்தியாவை சேர்ந்த 8 நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனம் 48 இடங்கள் முன்னேறி 94வது இடத்தை பிடித்துள்ளது.  இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி ஒன்பது இடங்கள் சரிந்து 107வது இடத்தைப் பிடித்துள்ளது.  எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் 158வது இடத்தையும்,  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 233வது இடத்தையும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 235வது இடத்தையும் பிடித்துள்ளது. இவை அனைத்துமே அரசுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர்த்து, டாடா மோட்டார்ஸ் 33 இடங்கள் முன்னேறி 337வது இடத்தையும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் 84 இடங்கள் முன்னேறி 353வது இடத்தையும் பிடித்துள்ளன.