இந்தியாவில் தொடர்ச்சியாகப் பெட்ரோல் விலை(Petrol Price) நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. தற்போது லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 110 ஐக் கடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரூ 100ஐக் கடந்தபோதே சமாளிக்க முடியாமல் திண்டாடிய மக்கள் தற்போது செய்வதறியாது திகைத்து வருகின்றனர். பெட்ரோலின் விலை கூப்பிடும் தூரத்தில் குறைவதற்கான வாய்ப்பில்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது. ஆனால் ஒரு சில நாடுகள் ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு ரூபாய்க்கு விற்கின்றன தெரியுமா? 


உலகிலேயே மிகக் குறைவான விலைக்குப் பெட்ரோல் விற்கும் நாடுகள் முதல் அதிகமான விலைக்கு விற்கும் நாடுகள் குறித்த பட்டியலைப் பார்ப்போம்...


சர்வதேச அளவில் வெனிசுலாதான் மிகக் குறைவான விலைக்குப் பெட்ரோல் விற்கிறது. இன்றைய தேதிக்கு அங்கே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.1.5, அதுவே அதிக விலைக்குப் பெட்ரோல் விற்கும் நகரம் ஹாங்காங். அங்கே ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய மதிப்பில் ரூ.198க்கு விற்கப்படுகிறது. அதிக விலைக்குப் பெட்ரோல் விற்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 53வது இடத்தில் இருக்கிறது. 




பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை ரூபாய் 50க்கும் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுதவிர ஸ்காண்டிநேவியன் தேசங்களில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.150க்கு மேல் உள்ளது. நார்வேயில் லிட்டர் பெட்ரோல் ரூ.170க்கும், நெதர்லாந்தில் ரூ.172க்கும் டென்மார்க்கில் ரூ.162க்கும் விற்கப்படுகிறது.


இதுதவிர ஆசியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஜப்பானில் ரூ. 93க்கும் சீனாவில் ரூ. 84க்கும் பங்களாதேஷில் ரூ.77க்கும் இலங்கையில் ரூ.68க்கும் இந்தோனேஷியாவில் ரூ.60க்கும் பாகிஸ்தானில் ரூ. 59க்கும் மலேசியாவில் ரூ. 37க்கும் விற்கப்படுகிறது.


முன்னதாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று ரூபாய் 106.4க்கு விற்கப்பட்டது. டீசல் விலை 102.25க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், புதிய மாதத்தின் தொடக்கமான நவம்பர் 1-ந் தேதியான இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து 6வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து காணப்பட்டது. பெட்ரோல் விலை 29 காசுகள் அதிகரித்து ரூபாய் 106.35க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.59க்கு விற்கப்பட்டது.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.