கடந்த வாரம் அதானி நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. அதானி குழுமத்தில் சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை, எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளதாகவும் தகவல் வெளியானது
”கேள்வி கேட்போம்”
இந்நிலையில் இது குறித்து எல்.ஐ.சி தெரிவிக்கையில், சில நாட்களுக்குள் அதானி குழுமத்தின் நிர்வாகத்துடன் பேசுவதாக இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) திங்களன்று தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில் "தற்போது ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது, உண்மையான நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் ஒரு பெரிய முதலீட்டாளராக இருப்பதால், அதானி நிறுவனத்திடம் தொடர்புடைய கேள்விகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது, நாங்கள் நிச்சயமாக அவர்களிடம் பங்குகளின் விலை சரிவு குறித்து கேட்போம் " என்று எல்ஐசி நிர்வாக இயக்குநர் ராஜ் குமார் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
எல்.ஐ.சி விளக்கம்:
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனமானது சுமார் 77 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தது என்றும் அதானி பங்கின் சரிவால் எல்.ஐ.சி 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினைச் சந்தித்துள்ளது எனவும் தகவல் வெளியானது.
இது குறித்து எல்.ஐ.சி தெரிவிக்கையில், அதானி குழுமத்தில் தாங்கள் முதலீடு செய்துள்ள அளவானது 36 ஆயிரத்து 474 கோடி ரூபாயாகும் . ஜனவரி 27 ஆம் தேதி வரை அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பானது 56 ஆயிரத்து 142 கோடி ரூபாயாகும். மேலும் எல்.ஐ.சி நிர்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பானது ரூ. 41.66 லட்சம் கோடியாகும். அதானி குழுமத்தில், முதலீடு செய்துள்ள அளவானது 0.975 சதவீதமாகும். தவறான தகவல்கள் பரவி வருகிற என்கிற காரணத்தில் இந்த தகவலை வெளியிடுகிறோம் என்று எல்.ஐ.சி தெரிவித்துள்ளது. மேலும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியே முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெரிய முதலீட்டாளராக இருப்பதால், அதானி நிறுவனத்திடம் தொடர்புடைய கேள்விகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது, நாங்கள் நிச்சயமாக அவர்களிடம் பங்குகளின் விலை சரிவு குறித்து கேட்போம் என எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.