இஸ்லாம் தனிநபர் சட்டத்தில் விவாகரத்து செய்து மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்துசெய்யக் கோரி கணவர் ஒருவர் ஐகோர்ட்டில் மனு அளித்து இருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு வந்த போது,  “கணவரை விவாகரத்து செய்ய, ஷரியத் கவுன்சிலில் இஸ்லாமிய பெண் பெற்ற குலா சான்றிதழ் செல்லாது என்றும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ஷரியத் ஜவுன்சில் என்பது தனியார் அமைப்பு, பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் கோர்ட் அல்ல” என்ற நீதிபதி தெரிவித்தார். அத்துடன், குடும்ப நல நீதிமன்றத்தை அணுகும்படி கணவன், மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது.


இஸ்லாமிய பெண், தனது மண வாழ்க்கையிலிருந்து ஒருதலையாக விடுபடுதவதன் பெயர் ‘குலா’ ஆகும். இஸ்லாமிய மதத்தில் உள்ள ஷரியத் சட்டத்தில், ஆண்களுக்கு தலாக் போல், பெண்களுக்கு குலா என்ற விவாகரத்து வழிமுறை உள்ளது. சமீப காலத்தில், அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட குழுவில், இஸ்லாமிய பெண்கள் பெரும்பாலும் ஒருதலை முடிவில் எடுக்கப்படும் குலாவை விரும்பதில்லை என்று கூறப்பட்டது.


அத்துடன், “குலாவை இஸ்லாமிய பெண் ஒருவர் முன்வைத்தாலும், இறுதியில் ஆண்களே விவாகரத்து முடிவினை எடுக்க வேண்டும். கணவர் குலாவை மறுத்தால், அப்பெண் ஃபஸ்க் முறையில் விவாகரத்தை பெறலாம்.” என்று தெரிவிக்கப்பட்டது. 


அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட குழுவின் இந்த அறிவிப்பு குறித்து,  கேரளா உயர்நீதிமன்றம் கூறியதாவது, “இஸ்லாமிய பெண்கள், குலா மூலம் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம். விவாகரத்து பெற, சம்மந்தப்பட்ட இஸ்லாமிய ஆண்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அவர்கள், எதிர்ப்பு தெரிவித்தாலும் இஸ்லாமிய பெண்கள் விவாகரத்தை பெற்று கொள்ளலாம். இஸ்லாமில், மனைவிகள் அவர்களின் கணவன் மார்களுக்கு கீழ்படிந்து நடப்பது போன்ற பிம்பம் உள்ளது. இதற்கு இஸ்லாமிய ஆண்களும், ஜமாத்தினரும் ஆதரவு தருவது போல் தெரிகிறது. இஸ்லாமிய பெண்கள், தங்களின் சுதந்திரத்தை அனுபவிப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.” என பதிலளித்தது. 


கேரளா நீதிமன்றம், இஸ்லாமிய பெண்களுக்கு குலா விவாகரத்து முறைக்கு உரிமை தந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் குலா விவாகரத்து முறைக்கு ஆதரவு தர மறுத்துள்ளது.


தலாக் என்றால் என்ன?


தலாக் என்பது, இஸ்லாமிய ஆண்கள் ஒருதலையாக முன்வைக்கும் விவாகரத்தாகும். மாதத்திற்கு ஒருமுறை என மொத்தம் மூன்று முறை தலாக் என்ற வார்த்தையை, தனது மனைவியை நோக்கி கூற வேண்டும். 


கணவரால் விவாகரத்து அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது மனைவி 3 மாதங்கள் அல்லது 3 மாதவிடாய் சுழற்சி காலம் ('இத்தாத்')  வரை காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், மனைவி ஒரே வீட்டில் கணவருடன் இருக்க  அனுமதிக்கப்படுகிறார், மேலும் அவரது நலன் மற்றும் பராமரிப்புக்கு கணவர் பொறுப்பேற்க வேண்டும். அந்த சமயத்தில், சம்மந்தப்பட்ட இஸ்லாமிய பெண் கர்ப்பமாக இருந்தால் தலாக் செல்லாது. 


முன்னதாக, தலாக் விவாகரத்து முறைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. முத்தலாக் மசோதா 2019 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடதக்கது.