ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவிருந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கையடக்க விலையில் ஸ்மார்ட் போன் என்ற திட்டத்தோடு உருவாக்கப்பட்டது தான் ஜியோபோன் நெக்ஸ்ட். இந்த ஃபோனை இன்று விநாயகர் சதுர்த்திக்கு அறிமுகப்படுத்துவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், செமி கண்டக்டர் பற்றாக்குறையால் இதன் அறிமுகம் தள்ளிப்போய் உள்ளது.
அதனால், தீபாவளிக்கு இந்த போன் அறிமுகம் செய்வதாகவும் அறிவித்துள்ளது. உலகளவில் செமி கண்டக்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது எடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து உற்பத்தியைப் பெருக்கலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ போன் நெக்ஸ்ட் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலானது ஆண்ட்ராய் 11 (Go edition)இயங்குதளத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதாக சில இணைய கசிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.குவால்காம் QM215 SoC புராசசருடன் ,5.5 இன்ச் டிஸ்ப்ளே வசதியுடன் இருக்கலாம் என கூறப்படுகிறது. 2 ஜிபி ரேம் அல்லது 3 ஜிபி ரேமுடன் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ரேமின் அளவிற்கு ஏற்ப 16 ஜிபி மற்றும் 32 ஜிபி அளவிலான eMMC 4.5 உள்ளடக்க மெமரி வசதிகளை கொண்டிருக்கும்.அடிப்படை மொபைல் போன்களில் இருப்பது போல செல்ஃபி கேமராவில் 8 மெகா பிக்சலும், பின்பக்க கேமராவில் 13 மெகா பிக்சலும் கொடுக்கப்பட்டிருக்குமாம். இது தவிர ப்ளூடூத் வசதி,ஜிபிஎஸ், 2,500mAh பேட்டரி வசதி,1080p திறன் கொண்ட வீடியோ ரெக்கார்ட் செய்யும் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் பார்ட்னர்ஷிப்பில் இருப்பதால் சில கூகுள் செயலிகள் மொபைல்போனில் இன்பில்டாக கொடுக்கப்பட்டிருக்கும்.இந்த மொபைல் போனானது 2ஜி அல்லது 3ஜி இணைய சேவையில் இருந்து 4ஜி சேவைக்கு மாற விரும்புபவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்படிருப்பதாக இதனை உருவாக்கிய ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாறாக இதில் ஸ்மார்ட்போன்களில் உள்ள வசதிகளை எதிர்பார்க்க முடியாது.
பிரபல கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சையுடன் இந்த மொபைல்போன் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை செய்தது ஜியோ. ஜியோபோன் நெக்ஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த 4ஜி மொபைலானது தீபாவளிக்கு சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் விலை ரூ.3500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சந்தைக்கு வரும் பட்சத்தில் செல்போன் விற்பனை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
செமி கண்டக்டர்கள் பற்றாக்குறையால் தொலைதொடர்பு துறை மட்டுமல்ல ஆட்டோமொபைல் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.