இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை 2022 ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என அந்த நிறுவனத்தை எடுத்து நடத்தி வரும் ஜலான் கல்ராக் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. அதே போல் சர்வதேச விமானங்களை 2022 ஆம் ஆண்டின் 4 வது காலாண்டில் இயக்கப்படும் என அந்த கூட்டமைப்பு கூறி உள்ளது.



1990 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான நரேஷ் கோயல் என்ற தொழிலதிபரால் மும்பையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்  இந்தியாவின் புகழ்பெற்ற முழு நேர விமான சேவை நிறுவனமாக உருவெடுத்தது. 252 பில்லியன் ரூபாய் வரை வருவாய் ஈட்டியது அந்த நிறுவனம். நரேஷ் கோயல் இந்தியாவின் 16 வது பெரும் பணக்காரராக உயர்ந்தார். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பின்னடைவை சந்தித்தது. 2017 - 18 நிதியாண்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.6.3 பில்லியன் மதிப்பில் பெரும் இழப்பை சந்தித்து திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அதில் பணிபுரிந்த 18 ஆயிரம் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியானது.


இதன் வழக்கை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜலான் கல்ராக் கூட்டமைப்பு ஏலத்தில் எடுத்து நடத்த முன் வந்தது. இதற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.



அதிலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்யும் பணிகளில் ஜலான் கல்ராக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட விமானங்களையும், ஐந்து ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட விமானங்களையும் இயக்க ஜெட் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.


ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் இயக்கப்படாததன் காரணமாக விமான நிலைய இறங்குதலங்கள் மற்றும் நேர அட்டவணையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இழந்துள்ளது. இதனை மீண்டும் பெறுவதில் ஜலான் கல்ராக் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 150-க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களை பணியில் அமர்த்தி இருக்கிறது. இன்னும் பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை 2022 ஆம் ஆண்டுக்குள் பணி அமர்த்த ஜலான் கல்ராக் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தொடங்குவதற்கான காலம் நெருங்கிவிட்டாலும், அது பழையபடி மீண்டும் வெற்றிகரமாக இயங்க இன்னும் பல காலம் ஆகும் என அதன் நிர்வாகிகளில் ஒருவரான சோனம் சந்த்வானி தெரிவித்து உள்ளார். அதே நேரம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜலான் கல்ராக் கூட்டமைப்பு எடுத்து நடத்துவதற்கு தேசிய நிறுவனங்களின் சட்ட தீர்ப்பாயம் அளித்து உள்ள ஒப்புதலை எதிர்த்து பஞ்சாப் நேஷனல் வங்கி தாக்கல் செய்த மேல்முறையீடு ஜெட் நிறுவனத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதில் முட்டுக்கட்டையாக உள்ளது.