ITR Filling: வருமான வரி  தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 6 நாட்களோடு முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வருமான வரி தாக்கல்:


மாத ஊதியம் பெறுவோர், தொழில் முனைவோர், வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான விதி. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதி ஆண்டுக்கான வரி விவரங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் மேல் பெறுபவர்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் கிடையாது. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்து விட்டால், அவர்களுக்கு சலுகைகளும் உண்டு. 


2023 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கியுள்ளது. அதாவது ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கடைசி தேதியை தவறவிட்டால், மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அபராதம் எவ்வளவு?


மேலும் இதனை டிசம்பர் 31 2023க்குள் செலுத்த வேண்டும். ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய தவறினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், ஒருவரது வருமானம் 5 லட்சத்திற்கும் மிகாமல் இருந்தால் அவர் 1,000 ரூபாய்  மட்டும் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு நபர் 25 லட்சத்திற்கும் அதிகமான வரியை செலுத்த வேண்டி இருந்தால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.  மேலும் வரியை செலுத்தும் வரை அந்த தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் வட்டியும் வசூலிக்கப்படும்.


என்னென்ன சலுகைகள்? 


வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80c என்பது வருமான வரி செலுத்தும் தனிநபர் ஒருவர், தனது வருமானத்தில் வரி விலக்கு பெறக்கூடிய செலவினங்கள், முதலீடுகளைப் பட்டியலிட்டு காட்டுவதாகும். ஒருவர் ஒரு வருடத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறுவதற்கு பிரிவு 80சி வழிவிகை செய்கிறது.  அதன்படி, லைஃப் இன்சூரன்ஸ், பொது வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், மூத்தக்  குடிமக்கள் சேமிப்பு திட்டம், 5 ஆண்டு வரி சேமிப்புக்கான வைப்பு நிதி, நபார்டு வங்கியின் கிராமப்புற பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால் பிரிவு  80சியின் கீழ் வரி விலக்கு பெறலாம். மேலும், வீட்டுக் கடன், கல்விக் கடன், வீடு வாங்கும்போது செலுத்திய பதிவுக் கட்டணங்கள் மீதும் பிரிவு 80சி கீழ் வரி சலுகை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.