நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

எஸ்பிஐ ஆய்வறிக்கை:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின்  விவரங்களின் அடிப்படையில், பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் வரி செலுத்துவதன் மூலம் ஏற்படும் முன்னேற்றங்கள், நடுத்தர குடும்பங்களின் வருவாய் வளர்ச்சி மற்றும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உய்ர்வு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. 2011-12 நிதியாண்டிலிருந்து 2022-23 நிதியாண்டு வரையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் விவரங்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

Continues below advertisement

ஆய்வு செய்தது எப்படி?

மாநில வாரியாக வரி செலுத்தியோரின் விவரங்கள் கிடைக்காததால், ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் ஆய்வறிக்கையின்படி, 2047ம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகை 161 கோடியாக இருக்கும். ஐநா அறிக்கயின்படி, வேலை செய்யும் வயதான 15 முதல் 64 வயது வரையிலான மக்கள் தொகை கொண்ட காலம் இந்தியாவில் 2040ம் ஆண்டு உச்சத்த எட்டி அதன் பிறகு சரிவை தொடங்கும். ஐநா அறிக்கையின்படி, 2047ம் ஆண்டு நாட்டின் மொத்த வேலை திறனில் 22 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபடுவர். அதோடு விவசாயம் அல்லாத பிற பணிகளில் ஈடுபடுவோர் வரிகளுக்கு கீழ் கொண்டுவரப்படுவர். மேற்குறிப்பிடப்பட்ட கூறுகளை அடிப்படையாக கொண்டு, எஸ்பிஐ வங்கி ஆய்வை நடத்தி முடித்துள்ளது. அதில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.8 கோடி பேர்:

கடந்த 2023ம் ஆண்டில் 7.8 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதேநேரம், 2022ம் ஆண்டில் 7.3 கோடி பேர் வருமான வரிதாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளிலும் வரி செலுத்தியவர்களில் 75 சதவிகிதம் பேர் அதாவது 5.8 கோடி பேர், குறிப்பிட்ட கால அவகாசம் முடிவதற்கு முன்பாகவே, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில், குறிப்பிட்ட கால அவகாசம் முடிவடைந்த பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டு 60 சதவிகிதத்திலிருந்த இந்த முறை 2023ம் ஆண்டு 25 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நடப்பாண்டில் புதிய மைல்கல்: 

நடப்பு நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஜுலை 31ம் தேதி நிறைவடைந்தது. அன்றைய தேதியின் முடிவில் 6.8 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதேநேரம், அபராதத்துடன் சேர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 2 கோடி பேர் வரையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியமானால், வருமான வரி தாக்கல் செய்வதில் 2023ம் ஆண்டு புதிய உச்சத்தை எட்டும்.  இது வரி செலுத்துவோர் மத்தியில் உள்ள ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு வருமான வரி செலுத்தும் படிவங்கள் மற்றும் செயல்முறைகளை எளிமைப்படுத்தியதோடு, திறமையான டிஜிட்டல்மயமாக்கல் எந்தளவிற்கு உதவிகரமாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.

மாநில வாரியான விவரங்கள்:

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலஙக்ள், வருமான வரி தாக்கல் செய்ததில் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. இந்த குறிப்பிட்ட 5 மாநிலங்களில் இருந்து மட்டும் 48 சதவிகித வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டை காட்டிலும் 2023ம் ஆண்டில் கூடுதலாக 64 லட்சம் பேர் கூடுதலாக தங்களது வருவாய் கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் கூடுதலாக 20 சதவிகிதம் அளவிற்கு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளன.