Twitter Block: எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருந்து ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கம்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இந்த மாற்றங்கள் பயனர்கள் மத்தியில் கலவையான விமர்சனைங்கள் பெற்று வருகிறது. அண்மையில் கூட ட்விட்டர் பெயரை ’எக்ஸ்’ என மாற்றயுள்ளார். இப்படி எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் வரும் நிலையில், தற்போது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதாக எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.
அதாவது, எக்ஸ் தளத்தில் இருந்து பிடிக்காத பயனர்களின் கணக்குகளை ப்ளாக் செய்ய முடியாது. அவர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய முடியும். மேலும், அவர்களது பதிவுகள் நமது டைம்லைனில் வருவதையும் தடுக்க முடியாது. இந்த ப்ளாக் ஆப்ஷனானது விரைவில் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். தற்போது எக்ஸ் தளத்தில் இருக்கும் ப்ளாக்கிங் ஆப்ஷன் மூலம் ப்ளாக் செய்யப்பட்ட பயனர்களின் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் வராமல் தடுக்க முடியும். இந்த வசதி தேவையில்லாத மெசேஜ்கள், ஸ்கேம் போன்றவற்றை வராமல் தடுத்தது. ஆனால் தற்போது இந்த வசதி நீக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தது பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அண்மையில் வந்த அப்டேட்:
வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் ட்வீட்களை அணுக முடியும். வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் 1000 ட்வீட்களையும், புதிய வெரிஃபைடு செய்யப்படாத கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 500 ட்வீட்களையும் அணுக முடியும். மேலும், வெரிஃபைடு செய்யப்படாத கணக்கில் இருந்து, மற்றொரு கணக்கிற்கு அனுப்பக்கூடிய நேரடி மெசேஜ்களின் (DM) அளவை குறைத்துள்ளது ட்விட்டர் நிறுவனம். இதனால் ட்விட்டர் ப்ளூ டிக் இல்லாத பயனர்கள், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தான் மெசெஜ்களை (DM) பகிரிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.