காலாவதி தேதிக்குப் பிறகு பான்-ஆதார் இணைப்பு: ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 30, 2023 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்திருக்கவில்லை என்றால், ஜூலை 1, 2023 முதல் உங்கள் பான் செயலிழந்திருக்கும். அப்படி ஆகியிருந்தால் இப்போது சில நிதிப் பணிகளுக்கு உங்கள் பான் எண்ணைப் பயன்படுத்த முடியாது. தேதி கடந்திருந்தாலும், அபராதம் செலுத்தி, பான் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.
ரூ.1000 அபராதம் செலுத்தி இணைக்கலாம்
பான் கார்டு செயலிழந்துவிட்டால், அதைச் செயல்படுத்த எளிய செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். ரூ. 1,000 கட்டணம் செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் ஆதார் எண்ணை கொடுத்த பின், 30 நாட்களில் மீண்டும் பான் எண்ணை செயல்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, ஜூலை 10 அன்று பான் எண்ணை ஆதாருடன் இணைக்க நீங்கள் கோரிக்கையை எழுப்பினால், ஆகஸ்ட் 9 அல்லது அதற்கு முன் உங்கள் பான் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
லாகின் செய்யாமல் ஆதார் அட்டையுடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?
படி 1: www.incometax.gov.in/iec/foportal/ இல் உள்நுழைந்து பான்-ஆதார் இணைப்பு நிலையைப் பார்க்கலாம்.
படி 2: இ-ஃபைலிங் போர்டல் முகப்புப் பக்கத்தில், ‘Quick Links’ என்னும் பெட்டகத்தில், 'link aadhar status' என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் PAN மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு, 'View Link Aadhaar status' என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது, உங்கள் ஆதார் இணைப்பு நிலை குறித்த செய்தி காட்டப்படும். ஆதார் பான் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு இருந்தால், அது பின்வரும் செய்தியைக் காண்பிக்கும்;
"You PAN is already linked to given Aadhaar"
ஆதார்-பான் இணைப்பு செயல்பாட்டில் இருந்தால், கீழே உள்ள செய்தி திரையில் தோன்றும்;
"Your Aadhaar-PAN linking request has been sent to UIDAI for validation. Please check the status later by clicking on ‘Link Aadhaar Status’ link on Home Page"
ஆதார் பான் இணைக்கப்படாமல் இருந்தால், அது பின்வரும் செய்தியைக் காண்பிக்கும்;
"You PAN is not linked to Aadhaar"
லாகின் செய்த பின் பான்-ஆதார் இணைப்பு நிலையைப் பார்ப்பது எப்படி?
படி 1a: இ-ஃபைலிங் போர்டல் முகப்புப் பக்கத்தில் உள்நுழைந்த பிறகு, உங்கள் டாஷ்போர்டிற்குச் சென்று, 'link Aadhaar status' என்பதை கிளிக் செய்யவும்.
படி 1b: அங்கு செல்லாமல், My Profile என்பதை கிளிக் செய்து, ஆதார் நிலையை இணைக்கலாம்.
(உங்கள் ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், ஆதார் எண் காட்டப்படும். ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் 'link Aadhaar status' என்று காட்டப்படும்)
வேறு ஆதாருடன் இணைந்திருந்தால்?
இதில் சரிபார்க்க முடியவில்லை என்றால், ஹோம் பக்கத்தில், link aadhaar என்பதைக் கிளிக் செய்யவும். இதில் உங்கள் பான் மற்றும் ஆதாரை இணைக்கும் படிகளை மீண்டும் செய்யவும். பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான உங்கள் கோரிக்கை UIDAI இல் சரிபார்ப்புக்காக நிலுவையில் இருந்தால், பின்னர் மீண்டும் அதன் ஸ்டேடஸ்-ஐ சரிபார்க்க வேண்டும்.
"Your Aadhaar is linked with some other PAN"
"Your PAN is linked with some other Aadhaar"
போன்ற செய்தியை பெற்றால், ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க அதிகார வரம்பு மதிப்பீட்டு அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டியிருக்கலாம்.