இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (IRDAI) வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களையும், பிற காப்பீட்டு நிறுவனங்களையும் திருநங்கைகளுக்கான காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளைத் தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

  


இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை வெளியிட்டுள்ள குறிப்பில், `இனி காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் திருநங்கைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் எழுத்துறுதி படிவங்களையும், அவற்றின் விதிமுறைகளையும் வெளியிட வேண்டும்; இதன்மூலம், திருநங்கைகளுக்கான காப்பீடு தொடர்பாக முழு விவரங்களும் வெளிப்படையாக கிடைப்பதோடு, பலரும் இந்த முறைகளைப் பயன்படுத்தி இணைவார்கள்’ எனக் கூறியுள்ளது. 


திருநங்கைகள் காப்பீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் போது, காப்பீட்டு நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களின் காப்பீட்டு விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலக்கப்படும், அவற்றின் அபாயங்கள் என்ன, செலுத்தப்பட வேண்டிய தொகை குறித்த விவரங்கள் முதலானவை கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என இந்த அறிவிப்பின் மூலம் கூறப்பட்டுள்ளது. 



இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலமாக இனி ஆயுள், மருத்துவம் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் எழுத்துறுதி அணுகுமுறைகளை வெளியிடுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, காப்பீட்டுத் திட்டங்களில் இணைய விரும்பும் திருநங்கைகளுக்கு முழுத் தகவல்களையும் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதன்மூலம் காப்பீடு மேற்கொள்ள விரும்பும் திருநங்கைகள் காப்பீட்டுத் திட்டங்களைப் புரிந்துகொள்ளும் விதமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. 


2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்பில், இந்தியா முழுவதும் சுமார் 4.8 லட்சம் திருநங்கைகள் இருப்பதாகவும், அவர்களின் கல்வியறிவு விகிதம் 56 சதவிகிதம் எனவும் குறிப்பிட்டிருந்தது. 


கடந்த 2016ஆம் ஆண்டு, இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை தங்கள் விண்ணப்பத்தில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் ஆப்ஷனை இணைத்த முதல் அரசு நிறுவனமாக அறியப்பட்டது. 



பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு வேறு கட்டணங்களை விதிப்பது இல்லை என்ற போதும், இதுகுறித்த தகவல்கள் பெரும்பாலும் வெளிவருவதில்லை. 


இந்த அறிவிப்பின் மூலம், இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை நிறுவனம் காப்பீட்டுத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முயன்று வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. 


மேலும், இன்று இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள் மத்திய நிதித்துறையின் சேவைகள் பிரிவின் செயலாளர் தேபாஷிஷ் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.