ஐ.ஆர்.சி.டி.சி எனும், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் ஐஆர்சிடிசி பங்குகள் 6,369.30 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது. இதனையடுத்து இதன் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது வர்த்தக நேர முடிவில் சரிந்துவிட்டது.
இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்நிலையில் ஐஆர்சிடிசியின் பங்குகள் இன்று ஏறத்தாழ 8 சதவிகிதம் அதிகரித்தது மற்றும் கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 33 சதவிகிதம் அதிகரித்தது. தற்போது, ஐஆர்சிடிசி ஒட்டுமொத்த எம்-கேப் (market capitalization) தரவரிசையில் 57 வது இடத்தில் உள்ளது. இன்றைய சாதனையின் மூலம், நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.
கடந்த ஜூலை 30, 2021 அன்று பங்குப் பிரிப்புத் திட்டத்தை (Stock Split Plan) அறிவித்த பிறகு ஆகஸ்ட் மாதம் முதல், ஐஆர்சிடிசியின் சந்தை விலை இருமடங்காக அதாவது 172 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் ஐஆர்சிடிசி பங்குகள் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் புக்கிங் சேவையில் ஐஆர்சிடிசி மோனோபோலியாக உள்ளது.
இதையடுத்து ஐஆர்சிடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.1 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதற்கு முன்பாக, ‘எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, என்.எம்.டி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ்.‘பாரத் பெட்ரோலியம், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிஉள்ளன. இந்நிலையில் ஐஆர்சிடிசிக்கு இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் வர்த்தக நேர முடிவில் ஐஆர்சிடிசி பங்குகள் 6,369.30 ரூபாயில் இருந்து 4,996.05 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இதன் மூலம் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவீட்டில் இருந்து 85,750 கோடி ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதன் மூலம் அதன் பங்கு கிட்டத்தட்ட சுமார் 15% குறைந்துள்ளது. முதலீட்டாளர்கள் ஐஆர்சிடிசி பங்குகளை விற்பனை செய்ததே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்