பெங்களூரை தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது பொதுப் பங்குகளில் இருந்து 9,300 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான கணக்குகளை வெளியிடுகையில் இன்ஃபோசிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொருளாதார சூழல் எண்ண முடியாத அளவு நலிவுற்றுள்ளது. இந்தியாவில் குறிப்பாக விலைவாசி, பணவீக்கம் என நிலவும் இக்கட்டான பொருளாதார சூழலில் நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் 6.8 விழுக்காடாகக் குறைத்துள்ளது.
இத்தைகைய பொருளாதார சூழலில் பைஜூஸ் உள்ளிட்ட சில நிறுவங்கள் லாபத்தைத் தக்கவைக்கும் பொருட்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் பொதுப்பங்குகளில் இருந்து 9300 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப்பெறும் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டுள்ளது.
மேலும் பங்கு ஒன்றுக்கு 16.5 ரூபாய் இடைக்கால லாபத்தையும் அந்நிறுவனம் அறிவித்தது. மூலதன ஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்ப ஒரு பங்குக்கு ரூ.16.50 இடைக்கால லாபத்தை அறிவித்துள்ளதாக இன்ஃபோசிஸ் தலைமை செயல் அலுவனர் நிலஞ்சன் ராய் முன்னதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனம் தனது வணிகத்தை ரஷ்யாவில் நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உக்ரைன் மோதலின் பின்னணியில் இந்த முடிவைத் தங்கள் நிறுவனம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
ஆரக்கிள் கார்ப் மற்றும் எஸ்ஏபிஎஸ்இ உட்பட பல உலகளாவிய ஐடி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது அனைத்து செயல்பாடுகளையும் உக்ரைன் மீதான போர் காரணமாக இடைநிறுத்தியுள்ளன.
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சலீல் பரேக், "சூழலைப் பார்க்கும்போது எங்கள் வணிகம் மற்றும் எங்கள் பணிகள் அனைத்தையும் ரஷ்யாவிலிருந்து ரஷ்யாவிற்கு வெளியே மாற்றத் தொடங்கினோம்.
நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை அறிவித்த பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சலீல் பரேக், இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் 100க்கும் குறைவான ஊழியர்களையே கொண்டுள்ளது என்றார்.
"எங்களுக்கு ரஷ்யாவில் வாடிக்கையாளர்கள் இல்லை. ரஷ்யாவில் நாங்கள் செய்யும் பணி உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கானது, இந்தச் சூழலில்தான் ஒரு மாற்றத்தைத் தற்போது தொடங்கியுள்ளோம். இந்தக் கட்டத்தில் இன்ஃபோசிஸ் கண்ணோட்டத்தில் எங்கள் வணிகத்துக்கு இதனால் எந்தவிதத் தாக்கமும் இல்லை," என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அந்தப் பகுதியின் வளர்ச்சியில் நிறுவனம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்றார். "களத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் மிகவும் வருத்தம் கொண்டுள்ளோம்," என்று சலீல் பரேக் கூறினார்.
ரஷ்யாவில் உள்ள தங்களது ஊழியர்கள் மற்ற நாடுகளில் உள்ள பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் பணிபுரிய நிறுவனம் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -