லட்ச ரூபாய், கோடி ரூபாய் என்பதெல்லாம் ஒரு காலத்தில் பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது கோடி ரூபாய் சேர்ப்பது ஒன்றும் பெரிய விஷயமாக தெரிவில்லை. கடந்த சில மாதங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறது. 58 வயது வரைக்கும் பணியில் இருந்தால் சில லட்ச ரூபாய் கிடைக்கும் என்னும் சூழலில் 30 வயதுக்குள்ளே கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பார்க்க முடிகிறது. இதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கின் வளர்ச்சியும் ஒரு காரணம்


பணியாளர்களுடன் லாபத்தை பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்தது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதனை தொடர்ந்து பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பங்குகளை வழங்கி வருகின்றன. புதுயுக டெக்னாலஜி நிறுவனங்கள் வந்த பிறகு, வேலையில் இருந்தாலும் பெரும் செல்வம் சேர்க்க முடியும் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதன் காரணமாகவே பாரம்பரியமான நிறுவனங்களை விட டெக்னாலஜி / ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தற்போதைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்.


பிரஷ்வொர்க்ஸ்: 500 கோடீஸ்வரர்கள்


கடந்த செப்டம்பரில் சென்னையை சேர்ந்த பிரஷ்வொர்க்ஸ் நிறுவனம் 500 கோடீஸ்வரர்களை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய கிரீஷ் மாத்ருபூதம் கோடி ரூபாய்க்கு மேல் பங்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 500. ஆனால் ஒரு கோடி, 5 கோடி, 10 கோடி அல்லது இதற்கும் மேலே கூட சில பணியாளர்களிடம் பங்குகள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நாங்கள் தெரிவிக்கவில்லை என கூறியிருக்கிறார்.



அதேபோல சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ஐபிஓ வெளியிட்ட ஜொமோட்டோ நிறுவனம் பல கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறது. ஜொமோட்டோ நிறுவனத்தில் நிறுவனரின் சொத்து மதிப்பு 4,650 கோடி ரூபாய். இதுதவிர 100 கோடிக்கு மேல் 7 உயர் அதிகாரிகள் பங்குகளை வைத்திருக்கிறார்கள். இது தவிர பலருக்கும் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் உள்ளன.


நய்கா நிறுவனத்தின்  ஐபிஓ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஆறு உயர் அதிகாரிகள் வைத்திருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு ரு.850 கோடி என தெரியவருகிறது.


பேடிஎம்: 350 கோடீஸ்வரர்கள்


பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. நிறுவனத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய பணியாளர்கள் சுமார் 350 நபர்களின் சொத்து மதிப்பு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இதில் சிலர் டாலர் மதிப்பில் கோடீஸ்வர்ர்களாக இருக்கிறார்கள். (அதாவது  7 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு).



இதுதவிர மொபி க்விக் என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனமும் பல கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறது. மேலும் ஓலா, ஜெரோதா, பாலிசிபஸார், மீஷோ, க்ரெட் உள்ளிட்ட பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பங்குகளை வழங்கியுள்ளன. ஒவ்வொரு கட்டமாக அந்த பங்குகளை பணமாக்கி கொடுப்பதற்கான வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதனால் வரும் காலத்தில் புதுயுக நிறுவனக்களில் இருந்த் பெரும் பணக்காரர்கள் வருவார்கள்.


என்ன காரணம்?


பணியாளர்களுக்கு பங்குகள் வழங்குவது தொடர்பாக சென்னையின் முக்கியமான டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஒருவரிடம் சில நாட்களுக்கு முன்பு உரையாடினேன். 30 வருடங்களுக்கு முன்பு முதலீடு என்பது முக்கியமான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது முதலீடு ஒப்பீட்டளவில் கிடைக்கிறது, ஆனால் தேவையான தகுதி வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை. அதனால் பணியாளர்களை தக்க வைப்பதற்கு இதுபோன்ற பங்குகளை வழங்குவது தவறில்லை.


தற்போது பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பங்குகளை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். ஆனால் இதனை வெல்த் டிஸ்ட்ரிபியூஷன் என்று குறிப்பிடுவது கொஞ்சம் பெரிய வார்த்தை என தெரிவித்தார். உதாரணத்துக்கு பேடிஎம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய். இதில் தற்போதைய அறிவிப்பின் படி 350 நபர்கள் கோடீஸ்வரர்களாக உயர்ந்திருக்கிறார்கள். சிலர் ஒரு கோடி டாலர்கள் வரை வைத்திருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால் கூட ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் மிக மிக குறைந்த சதவீதம் அளவுக்கு மட்டுமே நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வழங்குகின்றன.


இதுபோன்ற நடவடிக்கையை பாராட்டலாம், இதன் மூலம் மற்ற நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பங்குகளை வழங்குவார்கள். ஆனால் இவற்றை வெல்த் டிஸ்ட்ரிபியூஷன் என கொண்டாட முடியாது. மிகப்பெரிய தொகையை பகிர்ந்து அளித்தால்தான் வெல்த் டிஸ்ட்ரிபியூஷன் என அழைக்க முடியும் என கூறினார்.