இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவு அக்டோபர் (2024) மாதத்தில் 6.21 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது. 


நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 4.87 சதவீதமாக இருந்தது.இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) நிர்ணயித்ததை விட அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தாண்டில் முதல்முறையாக ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட, பணவீக்கம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


2024, அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 5.18 சதவீதமாக இருக்கும் என்ற  கணிப்பை விட தற்போது அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்க விகிதத்தை 2 - 6 சதவீதத்தில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. நடுத்தரமாக 4 சதவீதமாக இருக்க இலக்கு திட்டமிருந்தது. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் கிராமப் புறங்களில் பணவீக்கம் 6.68 சதவீதமாகவும் நகர்புறங்களில் 5.62 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. 


கடந்த செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.49 சதவீதமாக இருந்தது. நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது உணவுப்பொருள்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இது நடுத்தரக் குடும்பங்கள் பொருட்கள் வாங்கும் திறனை குறைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


All India Consumer Food Price Index (CFPI) தகவலின் படி உணவு பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 10.87 ஆக இருந்தது. இது கிராமப் பகுதிகளில் 10.69 சதவீதம் நகர்புறங்களில் 11.09 சதவீகமாக உள்ளது. இது கடந்த ஆண்டு 2023 இதே மாதத்தில் 6.1% ஆக இருந்தது.


 அக்டோபர் மாதத்தில் காய்கறிகளின் விலை 42.18% அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதம் 36% ஆக இருந்தது. தானியங்கள் மீதான பணவீக்க விகிதம் 6.94% ஆக அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பரில் 6.84% ஆக இருந்தது. இதேபோன்று பருப்பு வகைகளுக்கான பணவீக்க விகிதம் 7.43 சதவீதத்திலிருந்து 9.89 சதவீதமாக அதிகரித்துள்ளது. பழங்கள் 8.43% ஆக உள்ளது. மசாலா வகைகளின் பணவீக்கம் மட்டுமே 7.0% ஆக குறைந்துள்ளது. 


கடந்த அக்டோபர் 2024-ல் நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே சத்தீஸ்கர் 8.84% அதிக பணவீக்கம் கொண்டதாகவும் பிஹார் 7.83%, ஒடிசா 7.51% ஆக பட்டியலில் முதன்மையாக உள்ளது. குறைந்த பணவீக்கம் கொண்ட மாநிலங்களில் டெல்லி 4.01%, மேற்கு வங்காளம் 4.63% ஆகவும், மஹாராஷ்டிரா 5.38% ஆக இருந்ததாக தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கையில்,” சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கும் என்று தெரிகிறது. அடுத்து வரும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடலாம். அக்டோபரில் 2024ல் CPI பணவீக்கம் 6% ஆக உயர்ந்துள்ள நிலையில் 2024-2025-ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் MPC ரெப்போ வட்டி விகிதம் 60-70 bps குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், இது சாத்தியமான என்பது அடுத்த மாதம்தான் தெரியும்.” என்று தெரிவித்துள்ளனர். 


2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 7.79 சதவீதமாக இருந்தபோது, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் கடுமையான மாற்றங்களை கடைப்பிடித்தது உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.