தனியார் கூரியர் சேவைகளுக்கு போட்டியளிக்கும் வண்ணம் இந்திய தபால் துறையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஸ்பீட் போஸ்ட் சேவை விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறை சேவைகள்
தொலைத்தொடர்பு சாதனங்களில் அஞ்சல் சேவையின் பங்கு மிக முக்கியமானது. முந்தைய காலக்கட்டங்களில் மத்திய அரசு நாடு முழுவதும் நகரம் முதல் கிராமம் வரை அஞ்சல் சேவை கிடைக்கும் பொருட்டு அந்த துறை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய தபால் துறை மூலம் கடிதங்கள், பார்சல்கள், விரைவுத் தபால் (ஸ்பீட் போஸ்ட்), பணப் பரிமாற்றம், சிறு சேமிப்புத் திட்டங்கள், ஆயுள் காப்பீடு திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் சுமார் 1.6 லட்சத்திற்கு அதிகமான அஞ்சல் நிலையங்கள் இயங்குகிறது.
ஸ்பீட் போஸ்ட் சேவை
இதில் விரைவுத் தபால் சேவை என்பது தனியார் கூரியர் சேவைக்கு நிகராக கடிதம், ஆவணம், பொருட்களை மிக விரைவாக நாட்டின் எந்தவொரு மூலையில் இருந்தும் அனுப்ப முடியும். இதில் அதிகப்பட்சம் 35 கிலோ வரையிலான பொருட்களை அனுப்பலாம். தூரம் மற்றும் எடையைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும் நிலையில் அனுப்பும் தபால்களை நாம் இணையதளம் வாயிலாக கண்காணிக்க முடியும். அரசு துறைகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனம், பொதுமக்களும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
அதிரடி மாற்றம் பெறும் விரைவு தபால் சேவை
இதனிடையே தனியார் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் ஸ்பீட் போஸ்ட் சேவையில் மாற்றம் காணப்பட்டுள்ளது. புதிய நடவடிக்கை மூலம் இனிமேல் பிரீமியம் '24 ஸ்பீடு போஸ்ட்' மற்றும் '48 ஸ்பீடு போஸ்ட்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பார்சலும் அனுப்பலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் மார்ச் 17ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த புதிய பிரீமியம் சேவைகள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் மட்டும் முதற்கட்டமாக செயல்படும் என்றும், மற்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 24 ஸ்பீடு போஸ்ட் சேவை மூலம் 24 மணி நேரத்தில் உங்களுடைய தபால் டெலிவரி செய்யப்படும். இதை 48 மணி நேர சேவையிலும் நாம் பயன்படுத்தலாம்.
இந்த புது திட்டத்தின் கீழ் பார்சல்கள் அனைத்தும் விமானம் மூலம் அனுப்பப்படும். இதன்மூலம் கூரியரை விட வேகமான டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்சல் சேவையில் 5 கிலோ வரை அடிப்படை எடைக்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், அதற்கு மேல் மொத்த எடை மற்றும் தூரம் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்பீடு போஸ்ட் சேவையில் பதிவு செய்ய ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். உள்ளூர் மற்றும் 50 கிராம் வரையிலான பொருட்களுக்கு ரூ.15ம், நீண்ட தூரம் மற்றும் 50 கிராமுக்குட்பட்ட பொருட்களுக்கு ரூ.35ம், 500 கிராம் வரையிலான கனமான பொருட்களுக்கு ரூ.90 வரை தோராயமாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி தனியாக வசூலாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு கூடுதல் கட்டணம் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிவரி செய்யும்போது ஓடிபி அடிப்படையில் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஸ்பீட் போஸ்ட் சேவை 3 முதல் 5 நாட்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
