2027க்குள் ஜப்பான், ஜெர்மனி நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா மிகப்பெரிய நாடாக இருக்கும் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய பங்குச்சந்தை உலகின் சக்திவாய்ந்த பங்குச்சந்தைகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் என்றும் சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியா தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற துறைகளில் செய்யும் முதலீடுகளின் அடிப்படையில் இதனைக் கணித்துக் கூறுவதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.


இந்தியா ஏற்கெனவே வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழ்கின்றது. கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக 5.5 சதவீத ஜிடிபி வளர்ச்சியைக் காட்டி வருகிறது. இப்போது க்ளோபல் ஆஃப்ஷோரிங், டிஜிட்டலைசேஷன், எரிசக்தி ஆகியனவற்றில் மெகா ட்ரெண்டை காட்டி வளர்ந்து வருகிறது. இது  100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு வளமான பொருளாதார எதிர்காலம் இருப்பதற்கான அறிகுறி என்று மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.


இது குறித்து மோர்கன் ஸ்டான்லியின் தலைமை ஈக்விட்டி உத்தியாளர் ரிதம் தேசாய் கூறுகையில், இந்தியா விரைவில் ஜப்பான், ஜெர்மனி நாடுகளை விஞ்சி 2027க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளரும் என்று நம்புகிறோம்.  2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய பங்குச்சந்தை உலகின் சக்திவாய்ந்த பங்குச்சந்தைகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும். இவற்றின் காரணமாக இந்திய உலக அரங்கில் நாளுக்கு நாள் அதிக சக்திவாய்ந்த பலம் பொருந்திய நாடாக வளரும். முதலீட்டாளர்களுக்கு விருப்பமான நாடாகும் என்றார்.


மார்கன் ஸ்டான்லியின் தலைமைப் பொருளாதார நிபுணர் சேத்தன் அயா கூறுகையில், வளர்ச்சியை எட்ட தவிக்கும் உலகில், இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் சர்வதேச முதலீட்டாளர்கள் பார்வையில் பட்டுவிட்டது. அதனால் இந்தியா ஆண்டுக்கு $400 பில்லியன் பொருளாதார வளர்ச்சி காட்டும் மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக 2030க்குள் அவதரித்துவிடும். 2028ல் இது 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செல்லும் என்றார்.
 
மேலும் மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில், மென்பொருள் மேம்பாடு, கஸ்டமர் சர்வீஸ் எனப்படும் வாடிக்கையாளர் சேஎவை, பிசினஸ் ப்ராசஸ் ஆகிய சேவைகளை இணையம் ஆளத் தொடங்கிய நாளில் இருந்து  இந்தியாவில் இருந்துதான் அவுட்சோர்ஸ் செய்கின்றன. இப்போது அது இன்னும் அதிகமாகி உள்ளது. இந்திய உலகின் பேக் ஆஃபீஸாகிக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரிதம் தேசாய் மேலும் கூறுகையில், கொரோனாவுக்குப் பிந்தைய சூழலில் பெரு நிறுவனங்களில் சிஇஓக்கள் பலரும் ஒர்க் ஃப்ரம் ஹோம், ஒர்க் ஃப்ரம் இந்தியா என இரண்டு விஷயங்களில் சமரசமாகியுள்ளனர். வரும் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவுக்குள்ளேயே ஆட்களை அவுட்சோர்ஸ் செய்து வேலையில் அமர்த்துவது இரு மடங்காக அதிகரிக்கும். 11 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். அவுட்சோரிங் வகையறாவில் சர்வதேச செலவினமானது ஆண்டுக்கு 180 பில்லியன் டாலராக இருக்கு இது 2030க்குள் 500 பில்லியன் டாலராக அதிகரிக்கும்.


எம்என்சி பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை லாபகரமானதாகக் கருதுகின்றன. அரசு இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு கட்டுமான வசதிகள், நிலம், நீர் என அனைத்திற்கும் உதவுவதே காரணம் என்று மார்கன் ஸ்டான்லியின் மற்றொரு பொருளாதார நிபுணர் உபாசனா சச்ரா கூறுகிறார்.


மோர்கன் ஸ்டான்லி புள்ளிவிவரங்களின் படி இந்தியாவின் முதலீடு செய்யும் போக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் ஜிடிபில் ஏற்றுமதியின் பங்களிப்பு 15.6 சதவீதத்தில் இருந்து 2031க்குள் 21 சதவீதமாக அதிகரிக்கலாம்.