தங்கத்தின் மீது கடன் வாங்குவது எப்போதுமே பாதுகாப்பான கடன் ஆதாரமாகக் கருதப்படுகிறது. பலகாலமாக தனியார் வட்டிக்கடைகளே தங்கநகை கடனில் கொடிகட்டிப் பறந்த நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகள் கூட தங்க நகைகள் மீது கடன் பெறுவதை ஊக்குவித்து வருகிறது.


கொரோனா இரண்டு அலைகளுக்குப் பின்னர் நாட்டில் இப்போதுதான் கொஞ்சம் பொருளாதார நடவடிக்கைகள் பெருகிவருகின்றன. விழாக்காலம் என்பதாலும், கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அரசாங்கங்கள் அறிவித்து வருவதாலும் தனிநபர் செலவு, தொழில் மூலதனம் ஆகியனவற்றிற்காக நகைகளை அடகுவைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. தங்க நகைக் கடனைப் பொருத்தவரை வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனம் என இரண்டு கடன் ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றில் எதில் நகையை அடகுவைப்பது என்பதை உங்களின் தேவையைப் பொருத்து நீங்களே தீர்மானம் செய்து கொள்ளலாம்.


தங்க நகைக்கடன் எங்கே பெறலாம்?


ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகள் தங்கநகைக் கடனுக்கு சில அட்டகாசமான சலுகைகளை வழங்குகின்றன. வங்கி சாரா நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை முத்தூட், மனப்புரம் பினான்ஸ், ருபீக் ஆகியன சிறந்த தங்க நகைக் கடன் சேவையை செய்கின்றன.


தங்க நகைக்கடனின் நன்மைகள் என்னென்ன?


ஈஸி லோன்: முதலில் உங்கள் கையில் கொஞ்சம் தங்கம் இருந்தால் நீங்கள் உடனடியாக உங்களுக்குத் தேவையான கடனைப் பெற முடியும். மேலும், ஒவ்வொரு வங்கியும், நிதி நிறுவனமும் இயக்கும் இணையதளம் வாயிலாக எவ்வளவு கடன் தொகை பெற முடியும் என்பதை கணக்கிட்டுக் கொள்ள முடியும்.
கவர்ச்சிகரமான வட்டி விகிதம்: தங்க நகைகள் மீதான வட்டி விகிதம் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றது.  உங்களின் தேவை, பட்ஜெட்டுக்கு ஏற்ப நீங்கள் யாரிடம் கடன் பெறுவது என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.


பாதுகாப்பான வழிமுறை:


நகைக் கடன் வழங்குவோர் உங்களின் நகையைப் பாதுகாப்பாக வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதால் நீங்கள் அடகுவைத்த நகை பற்றி அச்சம் கொள்ளாமல் இருக்கலாம்.


எளிய முறையில் பணம்: 


தங்க நகைக் கடன் பெற ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலுமே ஆவணங்களை சமர்ப்பிப்பது என்பது மிக மிக எளிது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் என அனைத்துமே கேஒய்சி ஆதாரத்தை மட்டுமே கேட்கின்றன. அதனால், கிளைக்குச் செல்லாமலேயே கூட கடன் பெறலாம்.


சுலபமான EMI:


தங்க நகைக் கடனை எளிதான மாத தவணையில் செலுத்தும் வாய்ப்புகளும் வந்துவிட்டன. நீங்கள் உங்கள் நகையை ஓராண்டுக்கு அடகு வைத்திருந்தால். அதன் மீதான தொகையை காலக்கெடு முடியும்போதும் கொடுத்து திருப்பிக் கொள்ளலாம். அல்லது அதை மாதாந்திர சுலப்த் தவணையிலும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறாக இருக்கும் பற்பல வசதிகளாலேயே தங்க நகைக் கடன் வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் கடனாக இருக்கிறது.