ரூ.2000 நோட்டு வைத்திருந்தால் இப்போதும் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இதனால் அதனை வைத்துக் கொண்டு தவிக்கும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ரூ.2000 நோட்டு புழக்கம் - வாபஸூம்
கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பின் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 ஆகிய நோட்டுகள் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.2,000 ஆகிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ரூ.2000 நோட்டுக்கு சில்லறை கிடைப்பதிலும், அதில் போலி நோட்டுகள் புழக்கமும் அதிகரித்ததாலும் மத்திய அரசு நோட்டு அச்சடிப்பதை நிறுத்தியது. மக்களிடன் புழக்கம் குறைந்ததால் அதனை திரும்ப பெறும் நடவடிக்கையும் தொடங்கியது. இதனை வங்கிகள் மூலமாக திரும்ப பெறப்பட்டது. கிட்டதட்ட பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு நாளொன்றுக்கு குறிப்பிட்ட அளவு பணம் மாற்றவும் அனுமதிக்கப்பட்டது.
இதனிடையே புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.47 சதவீதம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் கோடியை தாண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரூபாய் நோட்டுகள் முழுவதுமாக திரும்ப பெறப்படவில்லை.
மீண்டும் மக்களுக்கு அரிய வாய்ப்பு
இதனிடையே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 மே 19 தேதியிட்ட அறிவிப்பின் மூலம், புழக்கத்தில் உள்ள ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது.ரூ.2000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான நிலவரத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இது குறித்த கடைசி பத்திரிக்கை வெளியீடு ஏப்ரல் 01, 2026 அன்று வெளியிடப்பட்டது. நாட்டின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் ரூ.2000 நோட்டுகளை வைப்புச் செய்வதற்கான மற்றும்/அல்லது மாற்றிக்கொள்வதற்கான வசதி அக்டோபர் 07, 2023 வரை வழங்கப்பட்டிருந்தது.
மே 19, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் (RBI Issue Offices) ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. அக்டோபர் 09, 2023 முதல், தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்வதற்காக ரூ.2000 நோட்டுகளையும் ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்கள் ஏற்றுக்கொள்கின்றன. மேலும், பொதுமக்கள் நாட்டின் எந்தவொரு அஞ்சல் நிலையத்திலிருந்தும் இந்திய அஞ்சல் துறை (India Post) வழியாக, தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்காக ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களுக்கு ரூ.2000 நோட்டுகளை அனுப்பி வருகின்றனர்.
Also Read: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
ரூ.2000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிக நேரம் முடிவடையும்போது புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. இது ஏப்ரல் 30, 2026 அன்று வணிக நேரம் முடிவடையும்போது ரூ.5,451 கோடியாகக் குறைந்துள்ளது. எனவே, மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 98.47% நோட்டுகள் இதுவரை திரும்பப் பெறப்பட்டுள்ளன. ரூ.2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமான பணமாகவே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
