இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநரான HDFC வங்கி மற்றும் அடமானக் கடன் வழங்கும் HDFC ஆகியவை ஜூலை 1 ஆம் தேதிக்குள் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நிறுவனங்களின் வாரியங்களும் ஜூன் 30 அன்று கூடி இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்காலிகமான தேதி


இந்த ஹெச்டிஎஃப்சி இணைப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று ஹெச்டிஎஃப்சி தலைவர் தீபக் பரேக் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இருப்பினும், அவர் குறிப்பிட்ட இணைப்பு நடைமுறைக்கு வரும் தேதி தற்காலிகமானது என்று மேலும் கூறப்பட்டுள்ளது. “எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தின் தலைவரின் பத்திரிகையாளர் உரையாடலைக் குறிப்பிடும் இன்றைய சில செய்தி அறிக்கைகளை நாங்கள் கவனித்தோம், அதில் ஜூலை 1, 2023 என திட்டத்தின் தற்காலிக அமலுக்கு வரும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு எச்டிஎஃப்சி லிமிடெட் பங்குதாரர்களை நிர்ணயிப்பதற்கான தற்காலிக 'பதிவு தேதி' ஜூலை 13, 2023 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலே உள்ள தேதிகள் தற்காலிகமானவை என்பதையும், HDFC லிமிடெட் அல்லது HDFC வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில சம்பிரதாயங்கள் முடிக்கும் நாட்கள் மாறலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்," என்று குறிப்பிடப்பட்டது.



இணைப்பிற்கு பிறகு என்னாகும்?


இணைப்பிற்குப் பிறகு, HDFC வங்கி இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக இருக்கும், குறிப்பாக அதன் போட்டியாளரான ICICI வங்கியை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும். கடந்த ஏப்ரல் 2022 இல், ஹெச்டிஎஃப்சி வங்கி நாட்டின் மிகப்பெரிய அடமானக் கடன் வழங்கும் ஹெச்டிஎஃப்சியை சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையகப்படுத்துவதாக அறிவித்தது. இணைப்பிற்குப் பிறகு, புதிய பிராண்ட் ரூ.18 லட்சம் கோடி இருப்புநிலைக் குறிப்புடன் ஒரு நிதி நிறுவனத்தை உருவாக்கும் என்று கூறப்பட்டது. "எச்டிஎஃப்சியின் கிளைகள் தொடர்ந்து செயல்படும், வெளியே இருக்கும் பலகைகள் எச்டிஎஃப்சி வங்கி என்று குறிப்பிடப்பட்டிருக்கும்," என்று பரேக் கூறினார். "60 வயதிற்குட்பட்ட எல்லா பணியாளர்களும் இங்கும் அதே வேலையை, அதே சம்பளத்தில் பெறுவார்கள்," என்று பரேக் மேலும் கூறினார். பரேக் தனது தற்போதைய பதவியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி இணைப்பிற்கு பிறகு ஓய்வு பெற உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: TN Weather Update: மீண்டும் அதிகரிக்கும் வெயில்.. 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்று எப்படி இருக்கும்?


கடன்களில் ஏற்படும் மாற்றங்கள்


ஹெச்டிஎஃப்சி வங்கியின் அனைத்து சேவைகளையும் வழங்க முடியாத சிறிய கிளைகள் வங்கியின் சேவை மையங்களாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார். இந்த இணைப்பு தற்போதுள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்களை குறுக்கு விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய திறனை வழங்கும் என்று ஹெச்டிஎஃப்சியின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேகி மிஸ்ட்ரி கூறினார். "HDFC வங்கியில் 70 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், அவர்களில் 2 சதவிகிதத்தினர் மட்டுமே HDFC வங்கியில் கடன் பெற்றுள்ளனர், 5 சதவிகிதத்தினர் மற்ற வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர்" என்று HDFCயின் துணைத் தலைவரும் CEOவுமான கெக்கி மிஸ்ட்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



பங்குகள் நிலை என்ன?


தாங்கள் வைத்திருக்கும் பங்குகள் என்னாகும் என்று, பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு கேள்வி ஏற்படலாம். ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, HDFC இன் பங்குதாரர்கள் 25 பங்குகள் வைத்திருந்தால், HDFC வங்கியின் 42 பங்குகளாக அது மாறும். இணைப்பிற்குப் பிறகு, HDFC வங்கி 100 சதவிகிதம் பொதுப் பங்குதாரர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும், மேலும் HDFC இன் தற்போதைய பங்குதாரர்கள் வங்கியின் 41 சதவிகிதத்தை வைத்திருப்பார்கள்.


இணைப்பு விவரங்கள்



  • இணைக்கப்பட்ட நிறுவனம் சுமார் ரூ.18 லட்சம் கோடி மொத்த சொத்துக்களைக் கொண்டிருக்கும்

  • எச்டிஎஃப்சி தலைவர் தீபக் பரேக் ஜூன் 30-ம் தேதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்

  • 60 வயதிற்குட்பட்ட அனைத்து HDFC ஊழியர்களும் HDFC வங்கிக்கு மாற்றப்படுவார்கள்

  • அடமானக் கடன் வழங்கும் நிறுவனத்தில் தற்போது 4,000 பணியாளர்கள் உள்ளனர்

  • HDFC வங்கி, HDFCயின் 25 பங்குகளுக்கு 42 புதிய பங்குகளை ஒதுக்கும்