மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்ற மறைமுக வரியை கொண்டு வந்தது. பெட்ரோல்,டீசல், மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஜிஎஸ்ட் வரி விதிப்பு தொடர்பாக முடிவு செய்ய மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த கவுன்சில் அடிக்கடி கூடி வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது உள்ள குறைந்த வரி சதவிகிதம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டி வரி 4 விகிதங்களில் உள்ளது. 5%,12%,18% மற்றும் 28%ஆகிய 4 விகிதங்களில் ஜிஎஸ்டி வரி உள்ளது.
இந்த வரி விகிதத்தில் தற்போது 5% என்ற குறைவான அளவை 7% அல்லது 8% விகிதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றை மட்டும் 3% சதவிகிதத்தில் மாற்றிவிட்டு மற்ற பொருட்களான வரியை 5% சதவிகிதத்திலிருந்து அதிகரிக்க கவுன்சில் முடிவு எடுக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு 3% ஜிஎஸ்டி வரி உள்ளது.
ஆகவே 5% வரி விகிதத்தில் உள்ள பொருட்களுக்கான வரியை ஒரு சதவிகிதம் அதிகருக்கும் பட்சத்தில் ஆண்டு தோறும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அதிக வருமானம் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி விதிக்கும் போது 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் குறைவிற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இழப்பீடு வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆகவே மாநிலங்கள் தங்களுடைய வருவாய் பெருக்க அதிகளவில் நிதி ஜிஎஸ்டி வரி மூல வர வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
இந்த இழப்பீடு முடிவிற்கு பிறகு என்ன செய்வது என்பதை ஆராய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு அடுத்த மாதம் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அதன்பின்னர் ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டத்தில் இந்த வரி விகித மாற்றம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்