கடந்த செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 10 சதவீதம் உயர்ந்து ரூ.1.62 லட்சம் கோடியாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டியது இது நான்காவது முறையாகும்.
செப்டம்பர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி மூலம் ரூ.29,818 கோடியும், மாநில ஜிஎஸ்டி மூலம் ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் ரூ.83,623 கோடியும் அரசுக்கு கிடைத்துள்ளது. இதில், ஒட்டுமொத்த ஜிஎஸ்டியில் பொருட்களின் இறக்குமதி மூலம் பெறப்பட்ட ரூ.41,145 கோடியும் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செஸ் மூலம் அரசுக்கு ரூ.11,613 கோடி கிடைத்தது. இதில் இறக்குமதி மூலம் ரூ.881 கோடியும் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயாக கிடைத்த ரூ.1.47 லட்சம் கோடியை விட இந்த செப்டம்பர் மாதம் கிடைத்த வருவாய் 10 சதவீதம் அதிகம் எனவும், இதன்மூலம், இந்த ஆண்டு நான்காவது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:
நேற்று ஞாயிற்றுக்கிழமை நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு ரூ.1,62,712 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் இதுவரை ரூ.9,92,508 கோடியை அரசாங்கம் வரியாக பெற்றுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் இதுவரை அரசின் சராசரி மாத வசூல் ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 11 சதவீத வளர்ச்சியாகும்.
ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கும் வசூல்:
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு ரூ.1,59,069 கோடி கிடைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் முதல் முறையாக ரூ.1.60 லட்சம் கோடிக்கும் குறைவான வசூலாக ஆகஸ்ட் மாதமே பதிவானது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1.60 லட்சம் கோடிக்கு மேல் அரசாங்கம் வசூலித்து வந்தது. இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதம் வசூல் குறைவே என்றாலும், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட, ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சிறப்பாகவே இருந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருட ஆகஸ்ட் வசூல் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொடிகட்டி பறந்த ஏப்ரல் மாதம்:
ஜிஎஸ்டியின் அடிப்படையில் 2023-24 நிதியாண்டு மிகவும் சிறப்பானதாகவே அமைந்துள்ளது. இந்த நிதியாண்டில் வசூல் அதிகளவில் அதிகரித்து புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசிற்கு ரூ.1.87 லட்சம் கோடி கிடைத்தது. இது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதாவது (ஏப்ரல் 2022 விட) 12 சதவீதம் அதிகமாகும். மேலும், இதுவரை எந்த ஒரு மாதத்திலும் இல்லாத ஜிஎஸ்டி வசூலானது 2023 ஏப்ரல் மாதமே பதிவானது.