சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்துள்ளது மத்திய அரசு. இது உள்ளூர் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நாடு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் மற்றொரு படியாகும். இதற்கிடையே தற்போது 5 சதவிகிதமாக உள்ள விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரியை குறைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அரசு தரப்பு வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியானது.
இதுதொடர்பாக இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும் அந்த தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செஸ் கூடுதல் வரியானது பண்ணை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி சேமிப்பு செய்ய மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் தாவர எண்ணெய் விலைகள் அதிகரித்து வருவதைக் குறைக்க மத்திய அரசுக்கு இருக்கும் வரையறுக்கப்பட்ட தேர்வுகளில் ஒன்றாக வரியைக் கட்டுப்படுத்தலாம். பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய் உட்பட பெரும்பாலான சமையல் எண்ணெய்களின் மீதான அடிப்படை இறக்குமதி வரிகளை இந்தியா ஏற்கனவே ரத்து செய்துள்ளது மற்றும் பதுக்கலை தடுக்க சரக்கு வரம்புகளையும் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அண்மையில் சில முக்கிய வரி அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருந்தார்.
1.கலால் வரி பெட்ரோலுக்கு ( லிட்டர் ஒன்றுக்கு) 8 ரூபாயும், டீசல் ( லிட்டருக்கு) 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்.
2.உர மானியத்திற்காக வழங்கப்பட்ட 1.10 கோடியுடன் கூடுதலாக 1.05 லட்சம் கோடி வழங்கப்படும். இந்த அறிவிப்பு இந்தாண்டு பட்ஜெட்டில் இடம் பெறும்.
3.பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் திட்டத்தின் சிலிண்டர் கேஸ் பெறும் பயனாளர்களுக்கு, தலா ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
4. இந்தியாவில் பிளாஸ்டிக் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் மற்றும் தொடர்புடைய உற்பத்தி பொருட்கள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது.
5. எஃகு, இரும்பு உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். அதே சமயம் சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.