புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வரியை குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார். புதுச்சேரியில் 3% குறைப்பின் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2.43 குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.99.52க்கும், காரைக்காலில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மலை போல உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை சில மாநிலங்களில் ரூ.101க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, சில மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான தங்களது வரியை குறைத்துள்ளன.
நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த விலை உயர்வு, சரிவடையாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தில் காங்கிரஸும் பாஜகவும் விலையேற்றத்துக்கு பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் எல்லாவற்றுக்கும் வரி குறைவு என்ற காரணத்தால் அனைத்து விதமான பொருட்களும் எளிதாகக் கிடைக்கும் சூழல் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் ரூ.3ஐக் குறைத்து அறிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளோர் தமிழகப் பகுதிகளுக்குச் சென்று பெட்ரோல் போடக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது புதுச்சேரிக்குப் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
நாளை புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் தற்போது பெட்ரோல் மீதான 3% வரியை குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார்.