மக்கள் தங்கள் வருவாயை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் இடமாக வங்கிகள் உள்ளது. வங்கிககள் கடன் வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வந்தாலும், சில விதிகளை மீறுவதற்காக வாடிக்கையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது. குறிப்பாக, வங்கிகளில் வாடிக்கையாளர் வைத்துள்ள சேமிப்பு கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகை குறைந்தபட்ச சேமிப்பாக வைக்காவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையானது ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு வகையில் மாறுபடுகிறது.


அபராதத் தொகை முழு விவரம்:


இந்த சூழலில், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வங்கியும் குறைந்தபட்ச இருப்புத்தொகை அதாவது மினிமம் பேலன்ஸ் தொகை இல்லை என்ற காரணத்திற்காக தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்த அபராதத் தொகையின் விவரம் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை கீழே காணலாம்.


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி           - ரூபாய் 20 கோடி


பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி        – ரூபாய் 55 கோடி


யூகோ வங்கி                                     - ரூபாய் 66 கோடி


யூனியன் பேங்க் ஆப் இந்தியா – ரூபாய் 415 கோடி


பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா          - ரூபாய் 471 கோடி


சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா – ரூபாய் 587 கோடி


பாரத ஸ்டேட் வங்கி                        - ரூபாய் 640 கோடி


பேங்க் ஆப் இந்தியா                       - ரூபாய் 828 கோடி


கனரா வங்கி                                     - ரூபாய் 1158 கோடி


பேங்க் ஆப் பரோடா                       - ரூபாய் 1251 கோடி


இந்தியன் வங்கி                               - ரூபாய் 1466 கோடி


பஞ்சாப் நேஷனல் வங்கி               - ரூபாய் 1538 கோடி


ரூ.8 ஆயிரம் கோடி:


மொத்தமாக ரூபாய் 8 ஆயிரத்து 495 கோடி அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையானது கடந்த 2019-20ம் நிதியாண்டு முதல் கடந்த 2023-24ம் நிதியாண்டு வரையிலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்டுள்ளார். தனியார் வங்கிகளில் அபராதத் தொகை இன்னும் அதிகளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.


இதில் சாமானிய மக்கள் அதிகளவு பயன்படுத்தும் வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி ரூபாய் 640 கோடியும், இந்தியன் வங்கி ரூபாய் 1466 கோடியும் அபராதமாக வசூலிக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2020-21ம் ஆண்டு முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூல் செய்வதை நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.