தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து 87 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்ச விலையில் சென்று அமர்ந்தது. இந்நிலையில், இன்று சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
படிப்படியாக உயர்ந்து உச்சிக்கு சென்ற தங்கத்தின் விலை
கடந்த செப்டம்பர் 26-ம் தேதி சவரன் 84,400 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, அன்று முதல் தொடர் உயர்வை சந்தித்து இந்த வார தொடக்க நாளான செப்டம்பர் 29-ம்தேதி 86 ஆயிரம் ரூபாயை கடந்தது. அன்றைய தினம், ஒரு கிராம் 10,770 ரூபாயாகவும், ஒரு சவரன் 86,160 ரூபாயாகவும் இருந்தது.
பின்னர், 30-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 10,860 ரூபாய்க்கும், ஒரு சவரன் 86,880 ரூபாய்க்கும் சென்றது. தொடர்ந்து, அக்டோபர் 1-ம் தேதி அன்று மேலும் உயர்ந்த தங்கத்தின் விலை, 87 ஆயிரம் ரூபாயை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்திற்கு சென்றது.
அன்றைய தினம் ஒரு கிராம் 10,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் விற்பனையானது. 2-ம் தேதியான நேற்று விடுமுறை நாள் என்பதால் அதே விலையில் நீடித்தது.
இன்று சரவனுக்கு ரூ.880 குறைந்த தங்கம் விலை
இந்த நிலையில், அக்டோபர் 3-ம் தேதியான இன்று, தங்கம் விலை சவரனுக்கு 880 ஞருபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் தங்கம் 10,840 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 86,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளதால், பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதேபோல் தொடர்ந்து குறைந்தால் நன்றாக இருக்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்று ரூ.3 குறைந்த வெள்ளியின் விலை
இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு 3 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 26-ம் தேதி முதல் தொடர் உயர்வை சந்தித்த வெள்ளியின் விலை, 153 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து, அக்டோபர் 2-ம் தேதியான நேற்று கிராம் 164 ரூபாய் என்ற வரலாற்று உச்ச விலையை அடைந்தது.
இந்த நிலையில், இன்று கிராமிற்கு 3 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 161 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ள நிலையில், கவலையில் இருந்த தங்கம் வாங்குவோர் மற்றும் திருமண வீட்டார் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.