தங்கம் விலை உச்சம் தொட்ட வருகிறது. தங்கத்தை வாங்க நினைக்கும் மக்கள், இதனால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு இது நல்ல ரிட்டர்ன்ஸ் தந்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை பெரிய அளவில் குறையும் என அமெரிக்க சந்தை நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில், தங்கத்தின் விலை 38 சதவிகிதம் வரை குறையும் என தெரிவித்துள்ளார். 


10 கிராம் தங்கம் = 55,000 ரூபாய்: 


அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்திய சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 90,000 ரூபாயை நெருங்கி வருகிறது. உலக சந்தையில் 3,100 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைந்து 10 கிராம் தங்கம் 55,000 ரூபாய்க்கு விற்கப்படும் என மார்னிங்ஸ்டாரின் (அமெரிக்க நிதி நிறுவனம்) சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் கணித்துள்ளார். தங்கத்தின் விலை தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு 3,080 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது. இதிலிருந்து 1,820 அமெரிக்க டாலர்களாக அவுன்ஸ் தங்கத்தின் விலை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.


தங்கம் விலை குறைய காரணம் என்ன?


பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட வர்த்தக மோதல்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக கருதினர். இருப்பினும், பல காரணிகள் காரணமாக தங்கம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.


அதிகரிக்கும் உற்பத்தி: தங்கம் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தங்க சுரங்க லாபம் அவுன்ஸ் ஒன்றுக்கு 950 அமெரிக்க டாலர்களுக்கு எட்டியது. உலகளாவிய தங்கத்தின் இருப்பு 9% அதிகரித்து 2,16,265 டன்களாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவும் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட தங்க விநியோகம் அதிகரித்துள்ளது.


குறையும் தேவை:


கடந்த ஆண்டு 1,045 டன் தங்கத்தை வாங்கிய மத்திய வங்கிகள், தங்கம் வாங்குவதை மெதுவாக்கலாம். உலக தங்க கவுன்சில் கணக்கெடுப்பின்படி, 71% மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்புகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளன.


இதையும் படிக்க: TN Economic Growth: லிஸ்டிலேயே வராத குஜராத், உ.பி., புது உச்சம் தொட்ட தமிழ்நாடு..! எதில் தெரியுமா? வாயடைத்த பாஜக