TN economic growth: தமிழ்நாடு 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சியுடன் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

புதிய உச்சத்தில் தமிழ்நாடு:

கடந்த 2024-25 நிதியாண்டில் மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம்,  9.69% பதிவாகியுள்ளது. நாட்டின் எந்தவொரு  மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் இது அதிகமாகும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பதிவு செய்த மிக அதிகப்படியான பொருளாதார வளர்ச்சி விகிதம் இதுவாகும். இந்த பட்டியலில் ஆந்திரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு உற்பத்தி விவரம்:

நிலையான விலைகளில் (அடிப்படை ஆண்டு: 2011-12), 2023-24 ஆம் ஆண்டிற்கான  தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.15,71,368 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஆனால்,  2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த மாநில உற்பத்தி  ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் (மாநிலங்களுக்கான முன்கூட்டிய மதிப்பீடுகள் மற்றும் நாடு தழுவிய இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் இரண்டிற்கும்) கிடைக்கும் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 8.59% ஆக இருந்ததே தமிழ்நாடு ஒரு நிதியாண்டில் பதிவு செய்த அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி விகிதமாகும். மிகக் குறைந்தபட்சமாக 0.07% சதவிகிதம் என்ற பொருளாதார வளர்ச்சி விகிதமானது, கொரோனா தொற்றுநோய் பரவிய 2020-21 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. அப்போது, ​​பல மாநிலங்கள் எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், குறைந்தபட்சம் தமிழ்நாடு நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

லிஸ்டில் வராத குஜராத், உ.பி.,

உண்மையான வளர்ச்சி விகிதம் (Real Growth Rate) என்ற சொல், பணவீக்கத்திற்கு அப்பாற்பட்ட விகிதத்தைக் குறிக்கிறது. பணவீக்கத்தை உள்ளடக்கிய விகிதம் பெயரளவு பொருளாதார வளர்ச்சி (Nominal Economic ) விகிதம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பெயரளவு வளர்ச்சி விகிதம் 14.02% ஆகும், இது மாநிலங்களில் மிக உயர்ந்ததாகும். குஜராத், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி விகிதத் தரவு மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படவே இல்லை.

மத்திய அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் புள்ளிவிவரம், கடந்த மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் கணிப்புடன் ஒத்துப்போகிறது. இந்த கணக்கெடுப்பு 8% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியைக் கணித்திருந்தது, மேலும் மூத்த பொருளாதார வல்லுநர்கள் சி. ரங்கராஜன் மற்றும் கே.ஆர். சண்முகம் ஆகியோரால் எழுதப்பட்டு ஜூலை 2024 இல் வெளியிடப்பட்ட மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (எம்எஸ்இ) இன் பணி அறிக்கை 9.3% ஆகக் கணித்துள்ளது. இறுதியில், தமிழ்நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சி மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு மதிப்பீடுகளை விட அதிகமாக இருந்தது.

வளர்ச்சி எந்தெந்த துறையில்?

மாநிலத்தின் செயல்திறனுக்கு மூன்றாம் நிலை (சேவைகள்) துறைகள் 12.7% வளர்ச்சியும், இரண்டாம் நிலை துறைகள் 9% வளர்ச்சியும் பதிவு செய்துள்ளன. முதன்மைத் துறையின் செயல்திறன் மிகவும் மோசமாக உள்ளது, 0.15% மட்டுமே. மாநிலத்தின் மொத்த மாநில மதிப்பு கூட்டலில் மூன்றாம் நிலை துறையின் பங்களிப்பு சுமார் 53% ஆகும், அதைத் தொடர்ந்து இரண்டாம் நிலை துறை 37% மற்றும் முதன்மை துறை 10% ஆக பதிவாகியுள்ளது.

மூன்றாம் நிலை துறைகளை சார்ந்த குடியிருப்பு மற்றும் தொழில்முறை சேவைகளின் உரிமையை உள்ளடக்கிய ரியல் எஸ்டேட் 13.6% உடன் சிறப்பாக செயல்பட்டது. அதைத் தொடர்ந்து தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் 13% ஆகவும், வர்த்தகம், பழுதுபார்ப்பு, ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் 11.7% ஆகவும் உள்ளன. இரண்டாம் நிலை துறையை சேர்ந்த, உற்பத்தி மற்றும் கட்டுமானம் முறையே 8% மற்றும் 10.6% ஆக வளர்ந்துள்ளன.

ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம்

முதன்மைத் துறை எனப்படுவது, பயிர்கள் மற்றும் கால்நடைகள் ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகளாகும். இரண்டும் சமமான செயல்திறனைக் கொண்டிருக்கவில்லை. பயிர்கள் பிரிவு -5.93% வளர்ச்சியையும், கால்நடைகள் 3.84% மிதமான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. சிறு குறு தொழில் நிறுவனங்கள் வாரியத்தின் முன்னாள் இயக்குநரான டாக்டர் சண்முகம், ”தமிழ்நாடு 2021-22 முதல் 8% அல்லது அதற்கும் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து சாதித்து வருகிறது.  வரும் ஆண்டுகளில் வலுவான ஏற்றுமதிகளுடன் 9.7%பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டால்,  2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும்” என கணித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:

பொருளாதார வளர்ச்சி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது! அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது. அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.