இந்திய பணக்காரர்கள் பட்டியலில் என்றுமே முக்கியமான இடத்தில் இருப்பவர் கெளதம் அதானி. ஆனால் இப்போது அதானி உலக பணக்காரர்களையே அதிரவைத்துக்கொண்டு இருக்கிறார்.
ராக்கெட் வேகத்தில் உயரும் அதானின் சொத்து மதிப்பால் உலக பணக்காரர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு அதானியின் நிகரலாபம் 500% அதிகரித்துள்ளது.போர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலின்படி அதானியின் சொத்து மதிப்பு 60 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. 2021ம் ஆண்டு மட்டும் பெறப்பட்ட லாபத்தைக் கணக்கிட்டால் உலக பணக்காரர்களான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் அதானி.
கடந்த 5 வருடத்தில் அதானியின் வளர்ச்சி:
அதானி எண்டர்பிரைசஸ், அதானி கேஸ், அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஸன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் எகனாமிக் சோன் என்ற 6 நிறுவனங்களை நடத்தி வருகிறார் அதானி. கடந்த 6 மாதங்களில் அனைத்து நிறுவனங்களிலும் பெற்ற லாபமே அதானியை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
கடந்த 6 மாதத்தில் அதானியின் நிறுவனங்கள் பெற்ற வளர்ச்சி:
நிறுவனங்கள் | அக்டோபர் 2020க்கு பிறகான வளர்ச்சி |
அதானி எண்டர்பிரைசஸ் | 323% |
அதானி கேஸ் | 584.4% |
அதானி பவர் | 159.4% |
அதானி ட்ரான்ஸ்மிஸன் | 377.3% |
அதானி கிரீன் எனர்ஜி | 47.4% |
அதானி போர்ட்ஸ் மற்றும் எகனாமிக் சோன் | 118.1% |
2020ம் ஆண்டு முதலே அதானியின் காட்டில் மழை பெய்யத் தொடங்கியது. அது 2021ம் ஆண்டு அடைமழையாகியுள்ளது. தனது 6 நிறுவனங்களில் போர்ட் நிறுவனம் தான் அதானிக்கு அதிக லாபத்தை கொடுத்துள்ளது.
நாட்டில் பல புதிய துறைமுகங்களை கையகப்படுத்தியதன் மூலம், அதானி நிறுவனம் கடந்த நிதியாண்டில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. பங்குச்சந்தை பங்கு 5% முதல் 41% வரை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கு 25% ஆகும், இது நிதியாண்டில் 4% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அதானியில் இந்த அசுர வளர்ச்சி பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் மாநில வாரியாக அவரின் தொழில், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பங்கு சந்தையில் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கும் அதானியின் வளர்ச்சி இன்னும் வரும் நாட்களில் உச்சம் தொடும். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சந்தை பங்கு சதவீதம் 4 சதவீதம் வளர்ச்சி என்பதும் பலரும் திரும்பி பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அதனால் தான் உலகப்பணக்காரர்கள் அதானியின் சொத்து வளர்ச்சியை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். அவரது தொழில் வளர்ச்சி கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உச்சத்திற்கு சென்றிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும் போது அவரின் வளர்ச்சியை தெள்ளத்தெளிவாக அறிய முடியும். தேசியத்தை கடந்து சர்வதேச அளவில் தொழில் சாம்ராஜ்யத்தை அதானி நகர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.