அதிரடியாக 15 ரூபாய் விலை உயர்ந்தது சிலிண்டர் விலை


சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையம் கேஸ் சிலிண்டரின் விலை 15 ரூபாய் அதிகரித்து 915 ரூபாய் ஆனது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை அதிகரித்த நிலையில் தற்போது வீட்டு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஏற்கெனவே அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிலிண்டர் விலை மீண்டும் 15 ரூபாய் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் சம்பளத்தில் பெரும்பான்மையான தொகை சமையல் சிலிண்டருக்கே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் டீசல் விலைகளை எண்ணெய் நிறுனங்கள் தினசரி மாற்றி அமைப்பது வழக்கம். ஆனால் சமையல் எரிவாயு விலை மாதத்துக்கு இருமுறை மட்டுமே மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில்  3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன.


இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாதத்தி்ல் 875.50 ரூபாய்க்கு  விற்கப்பட்டது. அதே மாதத்தில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டு 900 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 300 ரூபாய் அதிகரித்துள்ளது.


பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்தே பொதுமக்கள் இதுவரை வெளியில் வராத நிலையில் அக்டோபர் 6ஆம் தேதியான இன்று  தற்போது  மீண்டும்  சிலிண்டர் விலை 15 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ. 915.50ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.


 


மேலும் செய்திகள் படிக்க: