கடந்த வாரம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்கு பிறகு உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நான்கு மாதங்களுக்கும் மேலாக விலையில் மாற்றம் இல்லாத பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடுத்த வாரம் அரசு உயர்த்தப்போகிறது என்று ராயட்டர்ஸ் ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியா அதன் எரிபொருள் தேவையின் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே நிவர்த்தி செய்கிறது. சில்லறை பணவீக்கம் மத்திய வங்கியின் டாலரன்ஸ் வரம்பான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் பல நிறுவனங்கள் நவம்பர் முதல் கச்சா எண்ணெய் விலையில் ஏறக்குறைய 40 சதவீத அளவிற்கு உயர்த்தியுள்ளது. இதனால் மற்ற இறக்குமதி மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசம் உட்பட முக்கியமான மாநிலங்களில் சட்டசபை தேர்தலை முன்னிட்டும், தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்ககாவும் மத்திய அரசு நவம்பர் 4 முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இப்போது தேர்தல் மார்ச் 7 ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலைகளை உயர்த்தலாம் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது என மூத்த அரசு அதிகாரி ராயட்டரிடம் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க போர் தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் விலை உயர்ந்தது, வியாழன் அன்று ப்ரெண்ட் ஒரு பீப்பாய் 116 டாலருக்கு மேல் உயர்ந்தது. அதே சமயத்தில் கோதுமை, சோயாபீன், உரம் மற்றும் தாமிரம், எஃகு மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை லிட்டருக்கு 10முதல் 12 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்று மாநில எண்ணெய் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலின் அடிப்படை விலையில் 100 சதவீதத்துக்கு மேல் வரி வசூலிக்கும் மத்திய, அரசு பொதுமக்களின் போராட்டத்துக்குப் பிறகு, அரசு, தீபாவளியை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் குறைப்பதாக அறிவித்தது.
இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட உள்ளாதாக அரசு முடிவெத்துள்ளது மக்களின் வாழ்வாதராத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு எந்த நலனையும் வழங்காது என்று வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் ராகுல் காந்தி, ‘உங்கள் பெட்ரோல் டேங்குகளை முழுமையாக நிரப்பிக்கொள்ளுங்கள். நரேந்திர மோடி அரசின் தேர்தல் கால சலுகை விரைவில் முடியப்போகிறது.’ என்று கூறியுள்ளார்.
.