அமெரிக்காவின் Nasdaq பங்குச்சந்தையில் பிரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஐபிஒ மிகப்பெரிய முதலீடுகளை பெற்றுள்ளது. பிசினஸ் சாஃப்ட்வேர் நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ், செப்டம்பர் 22-ஆம் தேதி நாஸ்டாக்கில் தனது வணிகத்தைத் தொடங்கியது. நிறுவனத்தின் லிஸ்ட்டிங் விலை ஷேருக்கு 36$-ஆக இருக்கிறது

  


இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதன் நிறுவனர் கிரீஷ் மாத்ரூபூதம், "நிறுவனத்தின் அநேக பங்குகளை பணியாளர்கள் வாங்கியுள்ளனர். இதன் மூலம், பிரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோடிஸ்வரர்களாக மாறியுள்ளனர். இதில், 30 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 70 ஆக உள்ளது" என்று தெரிவித்தார்.    


முன்னதாக, அமெரிக்க பங்குச்சந்தையில் பங்குகள் விற்பனை மூலம் நிதி திரட்ட முடிவு செய்த இந்நிறுவனம், அந்த திட்டத்திற்கு  'சூப்பர் ஸ்டார்' என்று பெயர் வைத்தது. 



இந்தத் திட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்ததன் மூலம் என்னுடைய மானசீக குரு ரஜினி சாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் அவர் மீது எனக்கு உள்ள அன்பையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அவர் தான் என்னுடைய வாழும் ரோல்மாடல். சூப்பர் ஸ்டாரை உலகெங்கும் உள்ள பல லட்சம் ரசிகர்கள் போற்றி பாராட்டு வருகின்றனர். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல ரோல்மாடலாக இருப்பவரின் பெயரை வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி தலைவா” எனக் குறிப்பிட்டிருந்தார் கிரீஷ் மாத்ரூபூதம். 


பிரஷ்வொர்க்ஸ் நிறுவனம்: சென்னையை சேர்ந்த பிரஷ்வொர்க்ஸ் நிறுவனம் அமெரிக்கா பங்குச்சந்தையில் ஐபிஒ வெளியிட விண்ணப்பித்திருக்கிறது. திருச்சியை சேர்ந்த கிரீஷ் மாத்ரூபூதம் மற்றும் அவரது நண்பர்கள் ஷான் கிருஷ்ணசாமி ஆகிய நண்பர்கள் இணைந்து தொடங்கி நிறுவனம் இது. படித்து முடித்து அமெரிக்காவில் வேலை செய்து மீண்டும் இந்தியாவில் வந்து தொழில் தொடங்கும் முடிவில் சென்னை வந்திருக்கிறார். ஆனால் 2001-ம் ஆண்டு காலகட்டத்தில் டாட் காம் பிரச்சினை எழவே சூழ்நிலை சரியில்லாததால் மீண்டும் வேலைக்கு சென்றார். தற்போது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ஜோஹோ 2001-ம் ஆண்டு தொடக்க காலத்தில் இருந்தது. அந்த நிறுவனத்தில் 352 பணியாளராக இணைந்தார். நிறுவனம் வளரும் போது இவரது வளர்ச்சியும் நன்றாக இருந்தது. இந்த நிறுவனத்திலும் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் வீடு கார் என நல்ல நிலைமையில் இருந்தாலும் தொழில் தொடங்க வேண்டும் திட்டமிட்டார். வீட்டுக்கடன் இருந்தாலும் நண்பர்கள் உதவியுடன் பிரெஷ் டெஸ்க் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.


பின்னாட்களில் இந்த நிறுவனம் பிரஷ் வொர்க்ஸ் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு பிரஷ்டெஸ்க் தொடங்கப்பட்டது. 9 மாதங்களில் வென்ச்சர் கேபிடல் நிதி கிடைத்தது. முதல் வாடிக்கையாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் கிடைத்தது. தற்போது சர்வதேச அளவில் 52,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.


செக்யோயா கேபிடல், டைகர் குளோபல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. தவிர கூகுள் கேபிடல் இந்தியாவில் செய்த முதல் முதலீடும் பிரஷ் வொர்க்ஸில்தான். 2019-ம் ஆண்டு நிதி திரட்டியது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.5 பில்லியன் டாலர்கள். ஐபிஓவுக்கு பிறகு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் இருக்கும் என கணிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் 4000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் 13 நிறுவனங்களை பிரஷ்வொர்க்ஸ் வாங்கி இருக்கிறது.


2019-ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்த கிரிஷ் அதன் பிறகு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். சர்வதேச அளவில் 125க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளன. ஆனால் மொத்த வருமானத்தில் 40 சதவீதத்துக்கு மேல் அமெரிக்காவில் இருந்து வருவதால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். டெக்னாலஜி நிறுவனங்களின் பெரும்பான்மையான 80 சதவீத வருமானம் அமெரிக்காவில் இருந்துதான் கிடைக்கும். எங்களுக்கு குறைவாக இருப்பதால் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டேன் என கிரிஷ் தெரிவித்திருக்கிறார்.


கிரிஷ் முதலீடுகள்: பிரஷ் வொர்க்ஸ் நிறுவனத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதுப்போல கிரிஷும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். இங்க்மாங்க், சார்ஜ்பீ, பிக்யுவர் டிரெயில் உள்ளிட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். தவிர பிர்ஷ்வொர்க்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களும் 16 நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.


பிரஷ்வொர்க்ஸ் SaaS எனும் பிரிவில் செயல்பட்டுவருகிறது. இதுபோல பல சாஸ் நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. `சாஸ் பூமி’ என்னும் நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் நடத்தப்பட்டுவருகிறது. இதில் நிறுவனர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். சாஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதிலும் கிரிஷ் முக்கிய பங்கு வகிக்கிறார். 2021-ம் ஆண்டின் முக்கிய ஐபிஓவாக பிரஷ் வொர்க்ஸ் இருந்துவருகிறது.