சர்வதேச நிர்வாக துறை பேராசிரியர்களுள் முக்கியமானவர் பாலா பாலசந்திரன். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏதேனும் ஒரு நிர்வாக கல்லூரி முக்கிய இடத்தில் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி ஏதும் இல்லை என்பதால் தமிழ்நாட்டில் கிரேட் லேக்ஸ் என்னும் நிர்வாக கல்லூரியை தொடங்கி நடத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை நேர்காணல் செய்திருக்கிறேன். தவிர மகாபலிபுரத்தில் உள்ள கிரேட் லேக்ஸ் கல்லூரிக்கு பல முறை சென்று வந்திருக்கிறேன்.


இந்தியாவில் முக்கிய தொழில்முனைவோர்கள் பலரும் இந்த வளாகத்துக்கு வந்திருக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். பெரிய நடிகர் பேசத்தொடங்கினால் கூட்டத்தில் எந்தளவுக்கு ஆராவாரம் இருக்குமோ அதே அளவுக்கு ஆராவாரம் பேராசிரியர் பாலா பேசினாலும் இருக்கும். அந்த உற்சாகத்தை மேலும் பல மடங்குக்கு உயர்த்துவார் பாலா.


புதுக்கோட்டையில் உள்ள புதுப்பட்டி என்னும் கிராமத்தில் 1937-ம் ஆண்டு பிறந்தவர். இவரது அப்பா வழக்கறிஞர். குடும்பத்தில் மூத்தமகன். வழக்கமான குழந்தைகள் போல இவரும் குறும்புகளை செய்திருக்கிறார். விளையாடி இருக்கிறார். அப்பாவின் கையெழுத்தினை போட்டிருக்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் படிப்பின் மீது கவனம் செலுத்தினார். கணக்கு பிடித்த பாடமாக மாறியது.


கணக்கு ஆசிரியர் இந்த புதிரை போடுபவர்களுக்கு அரையனா வழங்குவதாக கூறுகிறார். இதை சவாலாக எடுத்துக்கொண்டு அந்த புதிருக்கு விடையளிக்கிறார். இவரது திறமையை பார்த்து இரு மடங்காக ஒரு ரூபாய் பரிசு அளிக்கிறார். பரிசை விட கணக்கு பிடித்துபோகிறது. பள்ளியில் நன்றாக படித்த மாணவராக இருந்தாலும் முக்கிய கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை.  அதனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கணிதம் படிக்கிறார். அங்கேயே எம்.ஏ. படித்து பேராசிரியராக தொடர்ந்தார்.


சீனா போர்


1962ம் ஆண்டு இந்திய சீனா போர் வந்தது. அப்போது சீனா ஆயூதங்களுக்கு முன்பு இந்தியர்களால் தாக்குபிடிக்கமுடியவில்லை. பல இந்தியர்கள் இறக்கிறார்கள். அதனால் குறைந்தபட்சம் ஐந்து சீனர்களையாவது கொள்ள வேண்டும் என ராணுவத்தில் இணைகிறார். ஆனால் வீட்டில் கடுமையான திட்டு. ராணுவம் என்பது வேறு தொழில், அங்கு வெற்றியடைவதற்கு படிப்பு மட்டுமே போதாது என அப்பா கூறுகிறார். ஒன்றை ஆண்டு காலத்துக்கு பிறகு மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்துவிடுகிறார்.


அப்போது அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சிக்காக சென்னை வருகிறார். இவருக்கு உதவுவதற்காக அமெரிக்காவுக்கு பாலா செல்கிறார். அங்கிருந்து பாலாவின் வாழ்க்கை மாறுகிறது. உதவி தொகை, பிஹெச்.டி படிப்பு என பலவும் கிடைக்கிறது.




கூடுதலாக அமெரிக்க குடியுரிமையும். இவர் உதவ சென்றது அமெரிக்க ராணுவத்தின் புராஜக்ட் என்பதால் புராஜக்டின் முக்கியமான கட்டம் வரும்போது வெளிநாட்டவர்கள் இந்த ஆவணங்களை பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என கூறப்படுகிறது. பேராசிரியரின் தாக்கத்தால் ஒரே நாளில் அமெரிக்க குடிமகனாகவும் மாறுகிறார்.


அதனை தொடர்ந்து கெல்லாக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைகிறார். நிதி மற்றும் அக்கவுண்ட் இவரது பாடம். இதில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி இருக்கிறார். நிர்வாகம் சார்ந்து சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். அமெரிக்கா மட்டுமல்லாமல் பல நாடுகளில் உரையாற்றி இருக்கிறார்.


மகாத்மா காந்தி


காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி இவரது உறவினர். இவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது மகாத்மா காந்தி புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறார். சத்தியமூர்த்தி உடன் குழந்தை பாலாவும் செல்கிறார். அப்போது விளையாடிக்கொண்டிருக்கும் பாலாவை பார்த்து நாட்டுகாக என்ன செய்வாய் என மகாத்மா காந்தி கேட்டிருக்கிறார். நாட்டுக்காக உயிரை கூட விடுவேன் என சொல்லி இருக்கிறார். அந்த நினைவு நன்றாக இருப்பதாக பல முறை பாலா தெரிவித்திருக்கிறார்.


இந்த நிலையில் 2002-ம் ஆண்டு பைபாஸ் சிகிச்சை நடக்கிறது. அப்போது காந்தியிடம் பேசியது நினைவுக்கு வருகிறது. இனியும் தாமத்திக்க கூடாது என 2004-ம் ஆண்டு கிரேட் லேக்ஸ் நிர்வாக கல்லூரியை சென்னையில் தொடங்குகிறார். இதனை தொடர்ந்து குர்கானில் விரிவு படுத்துகிறார். மும்பையில் இதனுடைய கிளையை தொடங்க வேண்டும் என திட்டமிடுகிறார். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.


கிரிசில், ஆர்சிட், ஆல்செக், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார். இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். சர்வதேச அளவில் பல முக்கியமான கருத்தரங்குகளில் உரையாடி இருக்கிறார்.


இதய அறுவை சிகிச்சை செய்த பிறகு சுமார் 19 ஆண்டுகள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து பறந்துகொண்டே இருந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தவர் நேற்று அமெரிக்காவில்  இயற்கை எய்தினார்


நிர்வாக கல்வித்துறை, தொழில்துறை,  அரசு, மாணவர்கள் என அனைவருக்கும் பாலமாக விளங்கிய பாலாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.


ஆழ்ந்த அஞ்சலிகள்…