போட்டி நிறைந்த ஆட்டோமொபைல் துறையில் இருந்து வெளியேற இருப்பதாக போர்டு கடந்த மாதம் அறிவித்தது. ஏற்கெனவே கட்டுமானத்துக்காக செய்திருந்த முதலீடு வீண். அதுதவிர கடந்த ஆண்டுகளாக நஷ்டம். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்காக கடந்த இரு மாதங்களில் ரூ.5000 கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாக த எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
சென்னை மற்றும் குஜராத்தில் அமைத்துள்ள ஆலைக்காக இதுவரை 250 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. தவிர கடந்த பத்தாண்டுகளில் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாததால் 200 கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிற்து. இந்த சூழலில் வெளியேறுவதற்கும் பெரும் தொகையை செலவு செய்ய இருப்பதாக தெரிகிறது.
இழப்பு என்ன?
போர்ட் நிறுவனத்துக்கு இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட டீலர்கள் உள்ளனர். இந்த அனைத்து மையங்களிலும் சுமார் 40,000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாளர்கள் வேலையில் உள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.
மேலும் கடந்த 2017-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியேறியது. அப்போது 142 டீலர்களும் சுமார் 15000 பணியாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் டீலர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இந்த விஷயத்தியல் மத்திய அரசு உதவ வேண்டும் என கனரக துறை அமைச்சகத்துக்கு டீலர்கள் சங்கம் கடிதம் எழுதி இருக்கிறது. எந்தவிதமான இழப்பீடும் வழங்குவதற்கு முன்பாக இழப்பீடு குறித்து எந்த தகவலையும் பொதுவெளியில் வெளியிட கூடாது என்னும் (என்டிஏ) ஒப்பந்தத்தில் கையெழுத்திட போர்டு கட்டாயப்படுத்துவதாக தெரிகிறது.
இதுதவிர இத்தனையாண்டுகளில் சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் போர்டு காரினை பயன்படுத்தி வருகிறார்கள். 15 ஆண்டுகளுக்கு சாலை வரி செலுத்திதான் வாகனம் வாங்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற சமயங்களில் நிறுவனங்கள் வெளியேறும்போது சரியான சேவை மற்றும் உதிர்பாகங்கள் கிடைப்பதில்லை. ஜெனரல் மோட்டார்ஸ் வெளியேறும்போது இதுதான் நடந்தது என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
போர்டு நிறுவனம் வெளியேறுகிறது என்னும் அறிவிப்பை வெளியிடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு கூட டீலர்களை நியமனம் செய்தது. பெருமளவுக்கு முதலீடு செய்திருந்த டீலர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி இருக்கிறது. மேலும் மேலும் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய செயல்பாட்டினை நிறுத்தலாம் என்னும் நிலையில் டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க சட்டம் வேண்டும் என டீலர்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.
டாடா வாங்குகிறதா?
சென்னை ஆலையை டாடா குழுமம் வாங்குவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2175 கோடி ரூபாயும், அக்டோபரில் ரூ.2900 கோடி ரூபாயும் இந்திய நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. எந்த காரணத்துக்காக இந்த தொகை என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. ஆனால் டீலர்கள், வெண்டார்கள், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளுக்காக இந்த தொகை என தெரிகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய வரும்போது பல சலுகைகள் வழங்கபடுகின்றன. இதனால் சந்தை பெரிதாகிறது, வேலை வாய்ப்புகள் உருவாகிறது என்பதுபோல பல நல்ல விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதே சமயம் வெளியேறும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.