ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 170 டீலர்களை கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர் என்று ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தெரிவித்துள்ளது.
வாகன உற்பத்தியில் சுமார் 2,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை டீலர்கள் செய்துள்ளனர். குறைந்தது 40,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தது.
ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவன ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு நிறுவனம் மூடப்படவுள்ளதால், அதில் பணிபுரியும் தமிழர்கள் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோ, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவில் ஆட்டோ மொபைல் டிலர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. ஃபிரான்சைசிஸ் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவா் வின்கேஷ் குலாட்டி கூறுகையில், " இந்த அறிவிப்பு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வாகன சேவையை வழங்கும் டீலர்களுக்குக் குறித்த நேரத்தில் போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்று ஃபோர்டு இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அனுராக் மெஹ்ரோத்ரா உறுதியளித்துள்ளார்.
இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், இத்தருணத்தில் இது போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுமார் 170 டீலர்கள், 391 விற்பனை நிலையங்களின் மூலம் ரூபாய்.2000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். ஃபோர்டு இந்தியா 4,000 பேரைத் தான் பணியில் அமர்த்தியது. இந்த டீலர்கள் சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பைகளை உருவாக்கியிருந்தனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக,கடந்தாண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற நிலைல் குழு, தனது அறிக்கையில், நாட்டின் ஆட்டோமொபைல் விற்பனையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் கனரகத் தொழில்துறை அமைச்சகம், ஃபிரான்சைசிஸ் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
கடந்த ஆண்டு ஃபோர்டு நிறுவனம் மீண்டும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டாக கார் தயாரிப்பில் ஈடுபடும் முயற்சியில் இறங்கியது. எனினும், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக, இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. உற்பத்தியில் இருந்து வெளியேறினாலும், கார்களை முழுவதுமாகவும், பாகங்களாகவும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவால் ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றிய 4000 தொழிலாளர்கள் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது.
மேலும், வாசிக்க:
Ford India: 1926 முதல் 2021 வரை.. சொகுசுக்காரன்... பவுசுக்காரன்... இது ஃபோர்டு வீழ்ந்த கதை!