உலகம் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அதனால் பெரு நிறுவனங்கள் பணியாளர் குறைப்பைத் தொடங்கியுள்ளதாகவும் தினந்தோறும் வெளியாகும் செய்திகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்களின் சொத்துப் பட்டியலைப் பார்த்தால் அவர்களது வளர்ச்சி மட்டும் குறையவில்லை என்றே தோன்றுகிறது.



 

பணக்காரர்களின் பட்டியலை வெளியீடு:

 

2022ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை, ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது . அதில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3 வது இடத்தில் இருக்கும் கவுதம் அதானி முதலிடத்திலும், 8வது இடத்திலுள்ள முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

 

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள  100 பணக்காரர்கள், இந்த ஆண்டில் 2 லட்சத்து நான்காயிரத்து 240 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதையடுத்து, இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 65 லட்சத்து 35 ஆயிரத்து 640 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் 31 லட்சத்து 46 ஆயிரத்து 393 கோடி ரூபாயக உள்ளது. 

 

அம்பானியை தள்ளியை அதானி:

 

கடந்த 2008ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு வேறு ஒருவர் வந்துள்ளார் என்றால் அது கவுதம் அதானி தான். கடந்த ஆண்டு அக்டோபரில் முகேஷ் அம்பானி 102 பில்லியன்களுடன் முதலிடத்திலும், கவுதம் அதானி 71.7 பில்லியன் டாலர்களுடன் இரண்டாமிடத்திலும் இருந்த நிலையில், தற்போது 12 லட்சத்து 11 ஆயிரத்து 460 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலாமிடத்தைப் பிடித்துள்ளார்.

 

கடந்த ஆண்டைக் காட்டிலும் சொத்து மதிப்பு 5 சதவீதம் குறைந்த நிலையில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 723 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். இந்தியாவின் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பில் அதானி, அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பு மட்டும் 30% ஆகும்.

 

வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் தமணி 2 லட்சத்து 22 ஆயிரத்து 908 கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சேர்மன் சைரஸ் பூனவல்லா கொரோனாவால் இந்த ஆண்டும் அதிக லாபத்தை சந்தித்துள்ளார்.  1 லட்சத்து 73 ஆயிரத்து 642 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இவர் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் சேர்மனான சாவித்ரி ஜிண்டால் 1 லட்சத்து 32 ஆயிரத்து 452 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய பெண் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவரும், டாப் டென்னில் இடம் பிடித்திருக்கும் ஒரே பெண் பணக்காரரும் சாவித்ரி ஜிண்டால் மட்டும் தான்.

 

புதிதாக டாப் 100:

 

இந்த ஆண்டின் டாப் 100 பட்டியலில் 9 பேர் புதிதாக இணைந்துள்ளனர். குடும்பப் பின்னணி ஏதும் இல்லாமல், வங்கி அதிகாரியாக இருந்து தொழிலதிபராக உருவெடுத்துள்ள நைகா நிறுவனத்தின் நிறுவனரான ஃபல்குனி நாயர், ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரவி மோடி ஷீ தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ரஃபீக் மாலிக், மறைந்த தொழிலதிபர் ஜுன் ஜுன் வாலாவின் மனைவி ரேகா ஜுன் ஜுன் வாலா உள்ளிட்டோர் புதிதாக இணைந்துள்ளனர்.

 

டாப் 100 பணக்காரர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 4 பேர் இந்த ஆண்டு மீண்டும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். 17 ஆயிரத்து 768 கோடி சொத்து மதிப்புடன் ஆனந்த் மகேந்திரா, பத்ரேஷ் ஷா, அனு அகா மற்றும் ஜோய் ஆலுக்காஸ் ஆகியோர் மீண்டும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பேடிஎம் சிஇஓவான விஜய் ஷங்கர் ஷர்மா குறிப்பிடத்தகுந்தவர்.