இந்தியாவில் கடந்த நிதியாண்டில் ஆன்லைன் தளங்களில் மட்டும், ரூ.4.95 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் அமோக விற்பனை:
முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஆனாலும் அதனை சேமிக்கும் நோக்கில், பொதுமக்கள் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வந்தனர். அதோடு, எந்த ஒரு பொருளை வாங்கும்போதும் நேரடியாக கடைக்குச் சென்று பொருளை பார்த்து, விலைபேசி வாங்குவதில் தான் ஒரு திருப்தியும் கொண்டிருந்தனர். ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதை போல, மனித வாழ்வியலையே இணைய சேவை மாற்றியுள்ளது. அதற்கு உதாரணமாக தான், சோம்பேறித்தனம் அதிகமாகி ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என வீட்டை விட்டு கூட வெளியே வராமல், ஆன்லைன் மூலமே அனைத்து பொருட்களையும் வாங்கி குவித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் இந்த ஆன்லைன் விற்பனை சரிவை சந்தித்து இருந்தாலும், தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக தனியார் நிறுவன ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ரூ.4.95 லட்சம் கோடிக்கு விற்பனை:
ரெட்சீர் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023 நிதியாண்டில் மட்டும் ஆன்லைன் தளங்களில் இந்தியர்கள் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் கோடிக்கு பொருட்களை வாங்கியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், ஆன்லைன் வணிக தளங்களின் வளர்ச்சி தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் இந்த விற்பனை நடைபெற்றுள்ளது.
ஆரோக்கியமான வளர்ச்சி:
ஆன்லைனில் வாங்கும் திறன் பொதுமக்களிடையே குறைந்து இருந்தாலுமே, அதன் வளர்ச்சி ஆரோகியமானதாக உள்ளது. 2023 நிதியாண்டில் ஆன்லைன் விற்பனையின் வளர்ச்சி 22% என குறைவாக இருந்தபோதிலும், ஆன்லைன் மூலமான விற்பனை மற்றும் சேவையின் அளவு கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது 2.5 மடங்கு அதிகமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஆன்லைன் தளங்களை முயற்சிக்க விரும்பும் புதிய பயனர்கள் அதிகரித்துள்ளனர். அதோடு, 2023 நிதியாண்டின் மொத்த பயனர்களின் எண்ணிக்கையில் பெரும் பங்கை, மெட்ரோ நகரங்கள் அல்லாத பகுதிகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
மாத பயனாளர் விவரம்:
இதனிடையே, மாத பயனாளர்களின் எண்ணிக்கையும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதன்படி, 2023 நிதியாண்டில் மாதத்தில் 6.5 கோடி பேர் ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்கியுள்ளனர். கொரோனா முந்தைய காலத்தில் 23 சதவிகிதமாக இருந்த ஆன்லைன் பேஸ் விற்பனை தற்போது 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அமேசான் தொடர்ந்து ஆதிக்கம்:
2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மொத்த ஆன்லைன் விற்பனையில், 48% சந்தைப் பங்கை தன்னகத்தே கொண்டு அமேசான் நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. மீதமுள்ள 52% சந்தைப்பங்கை அமேசான், மீஷோ, ஸ்னாப்டீல் மற்றும் நைக்கா ஆகிய நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. சமீபத்திய காலாண்டில் ஆன்லைன் வணிகள் தளங்கள் தொழில்துறையை காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது.