ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் கையகப்படுத்த உள்ளதாக அமெரிக்க வணிக தளமான ப்ளூம்பெர்க் தகவல்கள் தெரிவித்துள்ளது.


உலகின் பெரும் பணக்காரர்களுள் முதல் இடத்தை வகிப்பவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தினை வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.


தொடர்ந்து எலான் மஸ்குக்கும் ட்விட்டர் நிறுவன பங்குதாரர்களுக்குமிடையே முடிவுகள் இணக்கமாக எட்டப்படாத நிலையில், அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை ரத்து செய்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


இச்சூழலில் முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி, ட்விட்ட பங்கு ஒன்றை 54.20 டாலர்கள் வீதம் கையகப்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


 






ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்ததைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்கு விலை முன்னதாக 41.8 டாலராகக் குறைந்திருந்தது. ஆனால், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ட்விட்டர் பங்குதாரர்கள் வாக்களித்துள்ள நிலையில், தற்போது பங்குவிலை உயரத் தொடங்கியது.  


 






அதன்படி அமெரிக்க பங்கு சந்தையில் ட்விட்டர் நிறுவன பங்குகள் 47.93 டாலர்களாக முன்னதாக வர்த்தகத்தை நிறைவு செய்தன.


ட்விட்டரை வாங்கும் முடிவை எலான் மஸ்க் ரத்து செய்ததை அடுத்து, அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கு, இந்த மாதம் விசாரணைக்கு வரவிருந்தது.


 






இத்தகைய சூழலில் எலான் மஸ்க் பங்கு ஒன்று 54.20 டாலர்கள் என்ற வகையில் அந்நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளார் எனும் தகவல் வெளியாகி உள்ளது.