நாமக்கல் மண்டலத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தமிழகம், கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் தினமும் லாரிகள் மூலம் நாமக்கல்லில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரம் 4 கோடி முட்டைகள் செல்கிறது. வெளி நாடுகளுக்கு தினமும் 25 லட்சம் முட்டைகள் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் உற்பத்தியாகும் 52 கிராம் எடை கொண்ட பெரிய முட்டைக்கு என்இசிசி (தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு) தினமும் விலை நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி மாலை, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹5.90 ஆக நிர்ணயம் செய்தார். 


நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில இதுவே அதிக பட்ச விலையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஒரு முட்டையின் விலை ரூ. 585 காசாக இருந்தது. அதற்கு பின்பு கடந்த 2 ஆம் தேதி) ஒரு நாள் மட்டும் முட்டையின் விலை ரூ.585 காசாக இருந்தது. தற்போது, முட்டையின் பண்ணை கொள் முதல் விலை 590 காசாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது கடந்த ஒரு வாரமாக ரூ. 5.90 காசுகளாக நீடித்து வருகிறது. 



இதுகுறித்து, தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "பொதுவாக குளிர்காலங்களான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முட்டையின் நுகர்வு அதிகரிக்கும். தற்போது, வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் முட்டை விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் ஒரு நாள் முட்டை கூட இருப்பு இல்லை. தினமும் பண்ணைகளில் சேகரிக்கப்படும் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால், முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், முட்டை வியாபாரிகள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.


இது மட்டுமின்றி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வருவதால், கேக் தயாரிப்பதற்காகவும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 440 காசாக இருந்தது. அதன் பின்பு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஐதராபாத் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 610 காசுகள் வரை உயர்ந்துள்ளது. அதனை பின்பற்றியும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.


இந்த விலை கடந்த இரண்டு வாரங்களாக முட்டை விலை 590 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. முட்டை விலை உயர்வால் தமிழகத்தில் உள்ள கோழிபண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், முட்டையின் விலை வரலாறு காணாத உயர்வு மற்றும் கத்தார் நாட்டில் 60 கிராம் எடைக்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்ற புதிய ஏற்றுமதி கொள்கை போன்றவற்றால் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கொள்கையால், கடந்த மாதம் முதல், கத்தார் நாட்டுக்கு குறைவான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முட்டை விலை உயர்வால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் அதிக விலை கொடுத்து ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். நாமக்கல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முட்டை ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளதால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.