விழுப்புரம்: விழுப்புரத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி, பலவிதமான அகல் விளக்குகள், மாவொளியை விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபத்திருவிழாவே ஆகும். கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டிலே சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.


கார்த்திகை தீப திருநாள் இன்று 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் பொதுமக்கள் தங்களது வீடுகள், அலுவலகங்கள், கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவர். தொடர்ந்த 3 நாட்கள் நடைபெறும் இந்த தீப விழாவில் தீபம் ஏற்றுவதற்கான விளக்குகள் விற்பனை ஜோராக நடந்தது. முன்னூர், கிளாப்பக்கம், சாலை அகரம், ராகவன்பேட்டை, தென்னமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விதவிதமாக அகல் விளக்குகளை தயாரித்துள்ளனர்.


இந்த முறை பன்முகங்கள் கொண்ட 5 ஸ்டார், 7 ஸ்டார் அகல் விளக்குகள், சிங்கிள் ஸ்டெப் அகல் விளக்குகள், கலச அகல் விளக்கு, தாமரைப்பூ விளக்குகள், நெய் விளக்கு, தொங்கும் அகல் விளக்குகள், யானை விளக்குகள், தட்டு விளக்குகள், தேங்காய் அகல் விளக்கு, ஸ்டாண்ட் அகல் விளக்கு, சங்கு விளக்கு, குபேர விளக்கு, ஐந்தடுக்கு விளக்கு, அன்னப்பறவை விளக்கு, மேஜிக் லேம்ப் உள்ளிட்ட பல வகைகளிலும், பல வண்ணங்களில் சுடு மண் விளக்குகள் மற்றும் டெரகோட்டா அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. விதவிதமாக விளக்குகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சுடுமண் அகல் விளக்குகள் 1 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், விதவிதமான டெரக்கோட்டா விளக்குகள் 500 வரையிலும் வரையிலும் விற்பனையானது.


இதேபோன்று கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு பனை மரத்தின் பூ எரிக்கப்பட்டு, கரியை நுணுக்கி பனை மட்டையில் வைத்து செய்யப்பட்ட மாவொளியை சுற்றுவதன் மூலம் மத்தாப்பு போன்று பொறிகள் கொட்டும். இதன் மூலம் துன்பம் எல்லாம் கொட்டி தீர்ந்து இன்பம் ஒளியாய் ஒளிரும் என்பது ஐதீகம். இதனால் தீபத்திருநாளில் பல பகுதிகளில் விளக்குகள் ஏற்றுவார்கள், அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் மாவொளியை சுற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஒரு கார்த்திகை மாவொளியின் விலை 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுவது வழக்கம்


திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுவது வழக்கம். 2 ஆயிரத்து 688 அடி உயரம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை நேரில் தரிசிக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாதீபம் முழுக்க முழுக்க நெய்யில் நனைக்கப்பட்ட திரியால் ஏற்றப்படுவது வழக்கம். தீபம் ஏற்றுவதற்காக அதிகளவிலான காடாத்துணி மற்றும் நெய் பயன்படுத்தப்படுவது ஆண்டுதோறும் வழக்கம்.


மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் இன்று ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண பக்தர்கள் வரும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது. சுமார் 35 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி, கோவை என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


திருவண்ணாமலை மட்டுமின்றி மற்ற சிவாலயங்களிலும் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும், கார்த்திகை தீபம் முருகப்பெருமான் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் முருகப்பெருமான் கோயில்களிலும் கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.