Diwali Muhurat Trading 2023:
பங்குச் சந்தையில் தீபாவளி முகூர்த்த வர்த்தக நேரத்தை தேசிய பங்குச் சந்தை அறிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 12ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகூர்த்த வர்த்தகம் என்பது இந்தியாவில் தீபாவளியன்று நடைபெறும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். அதில், பங்குச் சந்தைகள் குறுகிய காலத்திற்கு வர்த்தகமாகும். இதன்படி, மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை முகூர்த்த வர்த்தகம் நடைபெற உள்ளது. ப்ரீ ஓப்பன் செஷனாக 8 நிமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மணி முதல் 6.08 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. block deal window மாலை 5.45 மணிக்கு திறக்கப்படும். 6 மணி வரை நடைபெறும்.
வழக்கமான சந்தை அமர்வு 6.15 மணி முதல் 7.15 மணி வரை நடைபெறும். வர்த்தக மாற்றத்தை ( trade modification) 7.25 மணி வரை மேற்கொள்ளலாம். கடைசியாக நிறைவு அமர்வு (closing session) இரவு 7.25 மணி முதல் 7.35 மணி வரை நடைபெறும்.
அது என்ன முகூர்த்த வர்த்தகம்? (Muhurat Trading)
தீபாவளி அன்று நடத்தப்படும் வர்த்தகமே முகூர்த்த வர்த்தகம் ஆகும். பங்குச் சந்தை விடுமுறை நாளில் மூடப்பட்டிருக்கும் நிலையில், முகூர்த்த வர்த்தகத்தில் சிறப்பு ஒரு மணி நேரம் மட்டும் திறந்திருக்கும். இந்த சிறப்பு வர்த்தகத்தின் மூலம் அதிர்ஷ்டமும் லாபமும் பெருகும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதே வகையில் 2018 முதல், முகூர்த்த வர்த்தகம் தொடங்கி ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளன. 2022-ல் பங்குச்சந்தை புள்ளிகள் 0.88 சதவீதம் உயர்ந்தன. 2021ஆம் ஆண்டில், பங்குச் சந்தை 0.49 சதவீதம் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. 2020 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மும்பை பங்குச் சந்தை benchmark index முறையே 0.45 சதவீதமும் 0.49 சதவீதமும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
முகூர்த்த வர்த்தகம் தொடங்கியது எப்படி? (Diwali Muhurat Trading)
பழங்கால இந்தியாவில் அரசன் விக்கிரமாதித்தன், முகூர்த்த வர்த்தகத்தைத் தொடங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும் 1957-ல் மும்பை பங்குச் சந்தை இந்த வழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தது. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை 1992ஆம் ஆண்டு இந்த பழக்கத்தைத் தொடங்கியது. தற்காலத்தில் முதலீட்டாளர்கள் முகூர்த்த வர்த்தக நாளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.